செய்திகள்
அமைச்சர் கே.என்.நேரு

உள்ளாட்சி தேர்தல் தேதியை ஓரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார்- அமைச்சர் கே.என்.நேரு

Published On 2021-08-29 08:27 GMT   |   Update On 2021-08-29 08:27 GMT
மாநகராட்சி விரிவாக்கத்தின்போது அதிக வருவாய் தரும் பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சி:

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், தில்லை நகர், புத்தூர், உறையூர், சிந்தாமணி, மரக்கடை, மலைக்கோட்டை ஆகிய பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.54.27 கோடி மதிப்பிலான மறுசீரமைப்பு பணிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் இன்னும் ஒரு ஆண்டிற்குள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடைமுறைப்படுத்தப்படும். இதில் 103.45 கி.மீ. தூரத்திற்கு பழைய குழாய்கள் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் 43,114 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

இதற்காக தில்லை நகர், உறையூர், அண்ணாநகர், மரக்கடை ஆகிய 4 இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன. அதேபோல் சிந்தாமணி, மலைக்கோட்டை பகுதிகளில் சம்ப் போன்ற தொட்டிகள் அமைக்கப்படும்.

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்தின் திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. விரைவில் அந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதற்காக மத்திய, மாநில அரசுகளின் மாநகராட்சி பகுதி திட்ட பங்களிப்பு குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் ரூ.1 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 1976-ம் ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்தில் காவிரி பாலம் கட்டப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகளுக்காக துளையிடும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால் இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவுக்கு பாலம் வலுவிழந்து உள்ளது.

இதற்கு மாற்றாக காவிரியில் ரூ.80 கோடியில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இவை தவிர திருச்சியில் உயர்மட்ட பாலங்களும் அமைக்கப்படுகிறது. மேலும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரையில் 60 அடி அகலத்தில் மெயின் ரோடு அமைக்கப்பட உள்ளது. இதேபோல் உறையூரில் இருந்து வயலூருக்கு நேரடி சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தேர்தல் அறிக்கையில் கூறியபடி திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். அதற்கான அறிவிப்பு பட்ஜெட்டிலும் வெளியிடப்பட்டது. அங்கு வணிக வளாகமும் கட்டப்பட உள்ளது. அங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரமும் நடைபெறும்.

திருச்சியில் மார்க்கெட்டுகளை பொறுத்தவரையில் தற்போது நடைமுறையில் இருக்கும் மார்க்கெட்டுகள் அதே இடங்களில் தொடர்ந்து செயல்படும்.

மாநகராட்சி விரிவாக்கத்தின்போது அதிக வருவாய் தரும் பஞ்சாயத்துக்கள் மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அடிப்படையில் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டால் அங்கு தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தப்படாது. ஊராட்சி மன்ற தலைவர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் பதவி காலம் முடியும் வரை அதே பதவியில் இருப்பார்கள். ஆனால் மாநகராட்சி கூட்டங்களில் அவர்கள் பங்கேற்க முடியாது.

மாநகராட்சி தேர்தல் தேதி குறித்த அட்டவணை தயாரிக்க அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் ஆணையிட்டு உள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. எந்த தேதியில் தேர்தலை நடத்தலாம் என்பது குறித்து துறை செயலாளர்கள், அதிகாரிகள் அறிக்கை தயாரித்து முதல்வரிடம் சமர்ப்பிப்பார்கள்.

அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதியை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி மாநகராட்சியின் வார்டுகள் 100 ஆக உயர்த்தப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, தற்போது தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கரூரில் தற்போது 52 வார்டுகள் உள்ளன. 3 லட்சம் மக்கள் தொகை இருந்தால் வார்டு எண்ணிக்கை 52-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும். 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை மக்கள் தொகை இருந்தால் அதற்கென அளவீடு உள்ளது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருந்தால் மக்கள் தொகை அடிப்படையில் வார்டு எண்ணிக்கை உயர்த்தப்படும். சென்னையை பொறுத்தவரை 200 வார்டுகள் என்ற நிலை நீட்டிக்கும் என்றார்.


Tags:    

Similar News