செய்திகள்
கைது

உத்தமபாளையம் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2021-01-13 12:41 GMT   |   Update On 2021-01-13 12:41 GMT
உத்தமபாளையம் நிதிநிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில், கடந்த சில ஆண்டுகளாக ஒரு தனியார் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் வட்டி வழங்கும் திட்டம், மாதாந்திர சீட்டு ஆகியவை அறிவிக்கப்பட்டன. அதில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பணம் செலுத்தினர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் பணத்தை செலுத்தியவர்கள், திரும்ப பெறமுடியாமல் தவித்தனர். மேலும் இதுதொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில் 550 பேரிடம் ரூ.40 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் கணக்காளர், ஒரு தம்பதி என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய உத்தமபாளையத்தை சேர்ந்த ஜமாலுதீன் (வயது 68) என்பவரை, நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மீதமுள்ள 4 நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News