ஆன்மிகம்
கோவில் வாசலில் காதுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மூடப்பட்டதால் முடிகாணிக்கை செலுத்திய பொதுமக்கள்

Published On 2021-04-27 06:42 GMT   |   Update On 2021-04-27 06:42 GMT
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மூடப்பட்டதால் வாசலில் வைத்து காது குத்துதல், முடிகாணிக்கை போன்றவற்றை பொதுமக்கள் செலுத்தி விட்டு் சென்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் தியேட்டர், வணிக வளாகங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கோவில்கள், வழிபாட்டு தலங்களை மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவில்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.

தஞ்சை பெரிய கோவில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளதால் கடந்த 16-ந் தேதியே மூடப்பட்டது. இதர கோவில்களான புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், கோடியம்மன் கோவில் மற்றும் அனைத்து கோவில்களும் நேற்று முதல் மூடப்பட்டன.

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மாலைகள் மற்றும் சூடம் வாங்கி வந்த பொதுமக்கள் மாலைகளை கோவில் முன்பாக உள்ள கேட்டில் தொங்க விட்டுவிட்டு அதன் அருகில் சூடம் ஏற்றி சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சிலர் முடி காணிக்கை செலுத்திவிட்டு தங்கள் குழந்தைகளுக்கு காது குத்துவதாக வேண்டி இருந்தனர். அதன்படி நேற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது உறவினர் மற்றும் குடும்பத்தினர் என 10 பேருடன் தங்களது குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்தி காது குத்துவதற்காக வந்தார்.

அவர் தாம்பூலத்தட்டுகளில் பழம், வெற்றிலை பாக்கு, தேங்காய். மாலை உள்ளிட்டவைகளும் எடுத்து வந்திருந்தார். ஆனால் கோவில் மூடப்பட்டு இருந்ததால் கோவிலின் அருகே முடி காணிக்கை செலுத்திவிட்டு கோவில் வாசலில் வைத்து தங்களது குழந்தைக்கு காது குத்தி நேர்த்திக் கடனை செலுத்தினார்.

கோவில் மூடப்பட்டு உள்ளதால் கோவிலை சுற்றி கடை வைத்திருந்த வியாபாரிகள் எந்த வியாபாரமும் இல்லாமல் கடையை திறந்து வைத்தபடி காத்து கிடந்தனர்.

இதேபோல் கோடியம்மன் கோவிலுக்குவந்த பக்தர்களும் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால் கோவிலின் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
Tags:    

Similar News