செய்திகள்
ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள்.

திருமண மண்டபங்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2021-09-09 11:12 GMT   |   Update On 2021-09-09 11:12 GMT
கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உருவாகும்.
திருப்பூர்:

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 100க்கு கீழ் இருந்து வந்தாலும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தொற்று பாதிப்பை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
 
அந்தவகையில் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் இப்பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தூய்மை, தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றன. அதில் ஒரு சில திருமண மண்டபங்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைளை மீறி கூட்டம் அதிகளவில் கூடியிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

அந்ததகவலின் படி அதிகாரிகள் திருமண மண்டபங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த மண்டபங்களில் இருந்து கூட்டத்தை வெளியேற்றினர். மேலும் அவர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு உருவாகும் என்பதால் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  

அரசு வழிகாட்டு நெறிமுறைகள் படியே திருமண மண்டபங்கள் செயல்பட வேண்டும். மீறி செயல்படும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News