செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

ஜனாதிபதியிடம் புகார் மனு- நாராயணசாமிக்கு கிரண்பேடி பதில்

Published On 2021-02-11 10:05 GMT   |   Update On 2021-02-11 10:05 GMT
டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அவருக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

புதுச்சேரி:

டெல்லியில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி புகார் மனு அளித்தார். அந்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிகழ்வுகளில் கவர்னர் தலையிடுகிறார் என்றும், சட்ட விதிகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து அதிகாரிகளை மிரட்டி நேரடியாக உத்தரவிடுகிறார் என்றும் கூறியிருந்தார்.

மேலும் புதுவை மக்களிடம் கவர்னரை திரும்பப்பெறக்கோரி பெற்ற கையெழுத்து பிரதிகளையும் நாராயணசாமி ஜனாதிபதியிடம் அளித்தார்.

அவருடன் சென்ற அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி ஆகியோரும் தனித்தனியாக கவர்னர் மீது புகார் மனுவை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் யூனியன் பிரதேச சட்ட விதிகளின்படியே தான் நடப்பதாகவும், புதுவை கவர்னரின் அதிகாரத்தை சுப்ரீம்கோர்ட்டு உறுதி செய்துள்ளது என்றும் முதல்- அமைச்சர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை நிர்வாகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 4 பெரிய டிஜிட்டல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறிப்பிட்ட சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றங்கள் ஏகபோகத்தை உடைத்து நிர்வாகத்தை நேர்மையானதாக, வெளிப்படை தன்மை கொண்டதாக மாற்றியுள்ளது.

முதலில் புதுவையில் அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல்மயமாக்கப்பட்டது. கொள்முதல், ஒப்பந்தம் சீராக்கப்பட்டது. பணமாக வழங்குவது நிறுத்தப்பட்டு நிதி அனைத்தும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.

ஒற்றை டெண்டர் முறை, நியமன டெண்டர் ரத்து செய்யப்பட்டது. மறைத்து வைக்கும் வி‌ஷயங்கள் எதுவும் இல்லாமல் போனது. 2-வதாக அனைத்து நலத்திட்ட நிதி, உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இடைத்தரகு ஒழிக்கப்பட்டு எந்த நிலுவையும் இல்லாமல் பயனாளிகளுக்கு நிதி சென்று சேர்ந்தது.

3-வதாக மத்திய அரசு, ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு வழங்கிய உத்தரவுகளின்படி யூனியன் பிரதேச சட்டம், பொது நிதி அதிகார விதிகள் கவர்னர் அலுவலகத்தால் முறையாக பின்பற்றப்பட்டது.

4-வதாக வாட்ஸ்அப், சமூக வலைதளம், காணொலி காட்சி மூலம் அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவு கண்காணிக்கப்பட்டது. ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக அறியப்பட்டது. அனைத்து துறைகளும் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்துடன் மத்திய அரசின் தொடர்பில் வைக்கப்பட்டது.

நிர்வாகத்தால் வியத்தகு மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களை ஏற்க மறுப்பது அசவுகரியமாகவும், வேதனையாகவும்தான் இருக்கும்.

இவ்வாறு பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பிரதமர், ஜனாதிபதி ஆகியோரின் சமூக வலை தளங்களுக்கும் இணைத்துள்ளார்.

Tags:    

Similar News