செய்திகள்
உணவு பரிமாறும் பல்கலைக்கழக மாணவர்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்

Published On 2020-12-05 20:04 GMT   |   Update On 2020-12-05 20:04 GMT
தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

விவசாயிகளின் நலனிற்காக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு விவசாயிகளில் ஒரு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பு வலுத்தது.

இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் டெல்லி சலோ போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26-ம் தேதி பேரணியாக திரண்டு டெல்லி  நோக்கி படையெடுத்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தில் முதல் நாளிலேயே சிலர் தடுப்பான்களை தூக்கி பாலத்திற்கு கீழே வீசியெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அவர்களை கலைக்க போலீசார் முதலில் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விவசாயிகள் டெல்லி போராட்டத்தினை முன்னிட்டு 6 மாத காலத்திற்கு தேவையான உணவு பொருட்களையும், டிரக்குகள், டிராக்டர்களில் சுமந்து கொண்டு சென்றனர்.

போராட்டத்திற்கு சுமூக தீர்வு காணப்படும் வகையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ்.தோமர் தலைமையில் கடந்த 1 மற்றும் 3-ம் தேதிகளில் அரசு சார்பிலான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையே நடந்த 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு காணப்படவில்லை.  இதையடுத்து, மத்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப வரும் 9-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாய தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் ராகுல் ஜெய்னா என்பவர் கூறுகையில், பகலில் மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் போஸ்டர்களை தயாரித்தோம்.  அதன்பின் உணவு வழங்கினோம். இந்த வேளாண் மசோதாக்களால் (சட்ட வடிவம் பெற்றுள்ளது) விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை.  அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என தெரிவித்தார்.
Tags:    

Similar News