செய்திகள்
தொல்.திருமாவளவன்

சங்பரிவார் அமைப்பின் திட்டங்களை செயல்படுத்தும் அரசுதான் பாஜக -திருமாவளவன் தாக்கு

Published On 2019-09-14 08:49 GMT   |   Update On 2019-09-14 08:49 GMT
சங்பரிவார் அமைப்புகளின் திட்டங்களை செயல்படுத்துகிற அரசாக பாஜக அரசு இருக்கிறது என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
மதுரை:

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்தி தினத்தையொட்டி, இந்தி மொழி பற்றிய கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து மதுரை விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் போது பாஜக அரசு, ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் தீவிரம் காட்டியது. இது இந்திய ஜனநாயகத்தை அழிக்கின்ற முயற்சி என நாங்கள் அன்றே கூறினோம். மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தபின்பு, தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.



ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அரசு எடுத்திருக்கும் முடிவு இதற்கு உதாரணமாகும். தற்போது வெளிப்படையாகவே உள்துறை மந்திரி அமித் ஷா, ஒரே தேசம் ஒரே மொழி என்ற கொள்கை இருந்தால்தான் இந்தியா வல்லரசு நாடாக இருக்க முடியும் என கூறியிருக்கிறார்.

இதுதான் அவர்களின் நீண்ட கால கனவுத்திட்டம். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் செயல் திட்டங்களை செயல்படுத்துகின்ற அரசாகத்தான் பாஜக இருக்கிறது. ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்றால் ஒரே தேசம்; ஒரே மதம், ஒரே தேசம்; ஒரே மொழி என்று பொருள்.

இந்தி மொழியை தவிர வேறு மொழி எதுவும் இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் இலக்கு. அதற்கேற்ப கல்விக்கொள்கையையும் அவர்கள் மாற்றி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News