உள்ளூர் செய்திகள்
பொதுமக்கள் சாலை மறியல் செய்த காட்சி

கலசப்பாக்கம் அருகே சுடுகாட்டு பாதை சம்பந்தமாக கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-01-17 06:25 GMT   |   Update On 2022-01-17 06:25 GMT
மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் மறியல் நடந்தது.

கலசப்பாக்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள வீரளூர் ஊராட்சி அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்த மக்கள் இறப்பு ஏற்பட்டால் வடகரை நம்மியந்தல் மாதா கோவில் வழியாக பிணத்தை எடுத்து சென்று அடக்கம் செய்ய சுடுகாட்டுப் பாதை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலனி பகுதியில் பெண் ஒருவர் இறந்தார். சுடுகாட்டு பாதை தற்போது சரியில்லை. அதனால் ஊரின் வழியாக செல்லும் மெயின் ரோடு பகுதியில் இறந்த பெண்ணின் பிணத்தை எடுத்து செல்ல முடிவு செய்திருந்தனர்.

இதற்கு வீரளூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து சென்றால் பல்வேறு பிரச்சனைகள் எழும் எனவே தற்போது செல்லும் பாதையிலேயே செல்லட்டும் என்று கூறினர்.

மேலும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீரென மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் செய்தனர். அப்போது மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷமிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் மறியல் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், ஆரணி கோட்டாட்சியர் கவிதா, கலசபாக்கம் தாசில்தார் ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனிவிஜயா தலைமையில் நள்ளிரவில் இருதரப்பினரிடையே சமரச கூட்டம் நடந்தது.

அப்போது சுடுகாட்டு பாதை விரைவில் சீரமைக்கப்படும். அதுவரை மெயின் ரோடு வழியாக பிணத்தை எடுத்து செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று இறந்த பெண் உடல் மெயின் ரோடு வழியாக எடுத்து செல்ல ஏற்பாடு செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

Tags:    

Similar News