செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜு

சசிகலாவால் அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது - அமைச்சர் கடம்பூர் ராஜு

Published On 2020-09-09 14:36 GMT   |   Update On 2020-09-09 14:36 GMT
அதிமுகவில் யாராலும், எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சென்னை:

விளாத்திகுளத்தில் உள்ள நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதி ரூ.24 லட்சம் செலவில் இசை பயில்வதற்கான இசைப்பள்ளி கட்டடப்பணி தொடக்க விழா இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு இசை பள்ளி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மாணவர் விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் எட்டயபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் 97 பேருக்கு ரூ.40 லட்சம் கடன் உதவிகள் மற்றும் 17 பேருக்கு ரூ.19 லட்சம் மதிப்பில் கறவை மாடுகளையும் அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.

நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர்கள் ராஜ்குமார், அழகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைதொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் திரையரங்குகளுக்கு 28 சதவீதம் என ஜி.எஸ்.டி. வரி இருந்தது. இதனை முதலமைச்சரின் அறிவுரையின்பேரில் அமைச்சர் ஜெயக்குமார் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கருத்தை அழுத்தமாக தெரிவித்து, இந்தியாவிலேயே தமிழகத்தில் உள்ள திரையங்குகளுக்கு ரூ.100 வரை 18 சதவீத ஜி.எஸ்.டி.யும், அதற்கு மேல் உள்ள தொகைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி.யும் என இரட்டை வரியை பெற்று தந்துள்ளோம்.

கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு திரையரங்குகளுக்கான ஜி.எஸ்.டி வரியை குறைத்தால் அதனை நடைமுறைப்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது.

முதலமைச்சர் துணை முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலுடன் அதிமுக சிறப்போடு இயங்குகிறது. அதிமுகவில் யாராலும் எந்த சக்தியாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. சசிகலா வருகையால் அதிமுகவில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
Tags:    

Similar News