செய்திகள்
மாணவன் ஐசக்பால் அலுங்மான்.

மணிப்பூரில் 12 வயது சிறுவன் 10-ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி

Published On 2019-12-03 05:14 GMT   |   Update On 2019-12-03 05:14 GMT
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அம்மாநில மேல்நிலைப்பள்ளி வாரியம் சிறப்பு அனுமதி அளித்து உள்ளது.
இம்பால்:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ- மாணவிகள் 15 வயது பூர்த்தி அடைந்து இருப்பார்கள். ஆனால் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அம்மாநில மேல்நிலைப்பள்ளி வாரியம் சிறப்பு அனுமதி அளித்து உள்ளது.

மணிப்பூரில் சுராசந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது மாணவன் ஐசக்பால் அலுங்மான். இவன் தனக்கு ஐ.க்யூ (அறிவாற்றல்) அளவு தற்போதைய வயதுக்கு உரியதை விட கூடுதலாக இருப்பதாக கூறி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வைஎழுத விண்ணப்பித்தார். இதையடுத்து மாணவனுக்கு உளவியல் சோதனை மற்றும் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டது.

இதில் ஐசக்பால் அலுங்மான் மனதளவில் வயது 17 வருடங்கள் 5 மாதங்கள் இருப்பதாகவும், அவனின் ஐ.க்யூ அளவு 141 என்ற அளவில் இருப்பதாகவும் சான்றிதழ் அளிக்கப்பட்டது. இந்த சோதனையை இம்பாலில் உள்ள மருத்துவ அறிவியல் இன்ஸ்டிடியூட் நடத்தியது.

மாணவன் ஐசக்பால் தனது வயதுக்கு மீறிய அறிவாற்றல் கொண்டு இருப்பதால் அவன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மேல்நிலைப்பள்ளி வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து ஐசக்பால் கூறும்போது, ‘நான் பொதுத்தேர்வை எழுத மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஐசக் நியூட்டனாக பிடிக்கும். அதற்கு காரணம் எங்களின் இருவரது பெயரும் பொதுவாக இருக்கிறது’ என்றான்.

ஐசக்பால் அலுங்மான் பள்ளியில் நடந்த அனைத்து தேர்வுகளிலும் முதல் இடத்தை பிடித்துள்ளான். ஏப்ரல் 1-ந்தேதியுடன் 15 வயது பூர்த்தி அடைந்த மாணவர்கள் மட்டுமே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியும் என்று விதி உள்ளது.

ஐசக்பாலின் அறிவாற்றலை கண்டு அவரது பெற்றோர் 10-ம் வகுப்பு தேர்வை எழுத சி.பி.எஸ்.இ.யிடம் விண்ணப்பித்தனர். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதையடுத்து மேல்நிலைப்பள்ளி வாரியத்திடம் விண்ணப்பித்து சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News