செய்திகள்
அமைச்சர் சுப்பிரமணியன்

போரூர் ஏரியை பாதுகாத்தது யார்? ஓ.பன்னீர்செல்வம் புகாருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

Published On 2021-07-17 08:39 GMT   |   Update On 2021-07-17 08:39 GMT
கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை பிரதமர் மோடி பாராட்டி இருப்பதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை:

போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாகவும், அரசு முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

போரூரில் ஏரி ஒன்று இருப்பதே தி.மு.க.வால்தான் அ.தி.மு.க.வுக்கு தெரியும். கடந்த கால ஆட்சியில் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அந்த ஏரியை நூற்றுக்கணக்கான லாரிகளில் மணலை கொட்டி சமன்படுத்த முயற்சித்தார்கள்.

அப்போது சென்னையில் குடிநீர் ஆதாரம் அழிந்து விடக்கூடாது என்று போராடியவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

அன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ஓ.பி.எஸ்.தான் அப்போது ஜெயலலிதா உத்தரவுப்படி ஏரியை மூடுவதற்குத்தான் முயற்சித்தார். ஆனால் மு.க.ஸ்டாலின் போராட்டத்தால் அந்த ஏரி பாதுகாக்கப்பட்டது.

இப்போதாவது அந்த ஏரியின் மீது அக்கறை வந்திருப்பதற்கு பாராட்டுக்கள். அவர் கூறி இருக்கும் குற்றச்சாட்டு பற்றி உடனே ஆய்வு செய்யப்படும். மருத்துவ கழிவுகளை கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்துக்கு நேற்று 25 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 1 கோடியே 77 லட்சத்து 32 ஆயிரத்து 170 தடுப்பூசி வந்துள்ளது. அதில் 1 கோடியே 76 லட்சத்து 19 ஆயிரத்து 174 பேருக்கு போடப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி 4 லட்சத்து 15 ஆயிரத்து 570 தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தின் பற்றாக்குறை பற்றியும் மக்களின் ஆர்வத்தை பற்றியும் டெல்லியில் சுகாதார மந்திரியிடம் விளக்கி கூறினேன்.

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசின் செயல்பாட்டை பிரதமர் மோடி பாராட்டி இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த மாதம் மட்டும் நிர்ணயித்த அளவில் தடுப்பூசிகள் வரும் என்றும் அடுத்த மாதம் அதிக அளவில் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டபடி சிறப்பு தொகுப்பில் 1 கோடி தடுப்பூசி வழங்கும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.

தமிழகத்தில் கடந்த 7 மாதத்தில் 2 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க அனைத்து இடங்களிலும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.15 கோடியில் சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை தொடங்கவும் வற்புறுத்தி உள்ளோம். மாணவர் சேர்க்கையை பொறுத்த மட்டில் கலைக்கல்லூரிகளில், தனியார் கல்லூரிகளில், ஜிப்மரில் சேர்த்து படிக்க வைப்பதை நிராகரித்துவிட்டோம். சிவகங்கை, தூத்துக்குடி மருத்துவ கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம் என்ற யோசனையை தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...கொரோனா 3ம் அலையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும்- நித்யானந்தா எச்சரிக்கை

Tags:    

Similar News