செய்திகள்
ரன்தீப் சுர்ஜேவாலா

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம் -காங்கிரஸ்

Published On 2019-11-09 08:17 GMT   |   Update On 2019-11-09 08:17 GMT
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம். இதற்காக 3 மாதங்களுக்குள் மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அந்த அறக்கட்டளையிடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படவேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு மதிப்பளிப்பதாக காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 

‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவொரு தனிநபர், குழு, சமூகங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ வழங்கப்படவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவதற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்’ என ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார். 

அனைத்து தரப்பினரும் மதச்சார்பின்மையை கடைப்படித்து, அமைதி காக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்  நிறைவேற்றி, வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதை வழங்கி, ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற நமது பாரம்பரியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாக ரன்தீப் சுர்ஜேவாலா குறிப்பிட்டார்.
Tags:    

Similar News