செய்திகள்
திட்டத்தை தொடங்கி வைத்த நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்

அரசின் சொத்துக்களை பணமாக்குவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

Published On 2021-08-23 22:27 GMT   |   Update On 2021-08-23 22:27 GMT
மத்திய அரசுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் புதிய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களில் ஏற்கனவே இருக்கும் பொது கட்டமைப்புகளை (பொதுத்துறை நிறுவனங்கள்) விற்பனை செய்வதும் ஒன்று என்று கடந்த மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

மத்திய அரசின் வசமிருக்கும் நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பதி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் ரூ.6 லட்சம் கோடியைத் திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline) மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமன் நேற்று தொடங்கி வைத்தார்.

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான மூலதனத்தை இந்தத் திட்டத்தின் மூலம் பெற மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நாடு மிகப் பெரிய வளர்ச்சி பெற, உள்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று  மத்திய அரசு மிகப் பெரிய அளவில் திட்டம் தீட்டி வருகிறது. இதற்கு பல லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என்பதால், இதற்குத் தேவையான நிதியைத் திரட்ட பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கவும் மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மின் பகிர்மானம் தொடர்பான பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று பணமாக்குவதன் மூலமே இந்த ரூ.6 லட்சம் கோடியை மத்திய அரசாங்கம் திரட்டப் போவதாகத் தெரிவித்துள்ளது. அரசு சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாடு முழுவதும் மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை, மொபைல் டவர்கள், ரெயில் நிலையங்கள் என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News