ஆன்மிகம்
அழகர் கோவில்

அழகர்கோவில் ஆடித்தேரோட்டம் நடத்தக்கோரிய மனு தள்ளுபடி

Published On 2021-04-23 04:58 GMT   |   Update On 2021-04-23 04:58 GMT
கொரோனா நிபந்தனைகள் மற்றும் முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அழகர்கோவிலில் பவுர்ணமி அன்று ஆடித்தேரோட்டம் நடத்த உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை அழகர்கோவில் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்சவ விழா புகழ்பெற்றது. சித்திரை திருவிழாவில் கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ஆடி பிரம்மோற்சவ விழா 10 நாள் நடைபெறும்.

இவ்விழாவில் முக்கியமானது ஆடித்தேரோட்டம். பவுர்ணமி நாளில் இந்த தேரோட்டம் நடைபெறும். அந்த சமயத்தில் தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து நிலைக்கு வரும். அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு ஆடி பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் தேரோட்டத்தை நேரில் பார்ப்பதற்காக மதுரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் காத்திருக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கொரோனா நிபந்தனைகள் மற்றும் முழு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அழகர்கோவிலில் பவுர்ணமி அன்று ஆடித்தேரோட்டம் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், தற்போது கொரோனா 2-வது அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டியது அவசியம். எனவே மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது நீதிபதிகள் என உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News