செய்திகள்
ஈஷா நாற்றுப்பண்ணை

மரம் நட விரும்பு... காவேரி கூக்குரல் திட்டத்தில் பொதுமக்களும் இணைந்து மரம் நடும் வாய்ப்பு

Published On 2020-11-18 10:46 GMT   |   Update On 2020-11-18 10:51 GMT
காவேரி கூக்குரல் திட்டத்தில் பொதுமக்களும் இணைந்து மரம் நடுவதற்கான வாய்ப்பை ஈஷா வழங்குகிறது.
கோவை:

ஈஷா யோகா மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்களில் பலருக்கும் மரம் நட வேண்டும் என்ற ஆசை இருக்கும், ஆனால் எங்கு நடுவது அதை எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பர். இப்படி மரம் நடவு செய்ய விரும்பும் மர ஆர்வலர்கள் சொந்தமாக நிலம் இல்லாவிட்டாலும் அவர்களும் மரம் நடும் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள காவிரி கூக்குரல் இயக்கம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
            
“மரம் நட விரும்பு” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளின் மூலம் பொது மக்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று மரக் கன்றுகளை நடவு செய்ய முடியும். 
 
காவேரி கூக்குரல் இயக்கம் ‘மரம் சார்ந்த விவசாயம்’ குறித்த விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் உருவாக்கி வருகிறது. அதன் விளைவாக தமிழகம் முழுவதும் விவசாயிகள் பெருமளவில் தங்களின் விளைநிலங்களில் மரக் கன்றுகளை நட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அவ்வாறு முன்வரும் விவசாயிகளின் விளைநிலங்களில் ஈஷா மரம் சார்ந்த விவசாய திட்டத்தின் பிரதிநிதி நேரில் சென்று மண் மற்றும் நீரின் தன்மைகளை ஆய்வு செய்து அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்ற மரக்கன்றுகளை பரிந்துரை செய்கின்றனர். பின்னர் விவசாயிகளின் தேர்வின் அடிப்படையில் மரக் கன்றுகள் விளைநிலங்களில் நடப்படுகின்றன.

இவ்வாறு விவசாயிகளின் விளைநிலங்களில் மரக் கன்றுகள் நடப்படுவதால் மரக் கன்றுகளின் பராமரிப்பு எளிதாகிறது. அதே போல் மரங்களினால் மண் வளமும், நீர் வளமும் பெருகும் நிலை ஏற்படுகிறது. மேலும் மரங்கள் பல்வேறு வகைகளில் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகை செய்கின்றது.

தமிழகத்தில் மட்டும் 30 ஈஷா நாற்றுப் பண்ணைகள் இயற்கை முறையில் மரக் கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் மாதம்தோறும் வெவ்வேறு இடங்களில் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற இருக்கின்றது. அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த தகவல்களுக்கு 80009 80009 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News