செய்திகள்
கோப்புபடம்

கொரோனா சிகிச்சையில் மருத்துவ சாதனங்களை கையாள 1 லட்சம் பேருக்கு பா.ஜனதா பயிற்சி

Published On 2021-06-07 03:19 GMT   |   Update On 2021-06-07 03:19 GMT
கொரோனா சிகிச்சையின்போது, வென்டிலேட்டர் உள்பட அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை கையாள்வதற்காக 1 லட்சம் சுகாதார தன்னார்வலர்களுக்கு பா.ஜனதா சார்பில் பயிற்சி அளிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

கொரோனா பிரச்சினையில் பா.ஜனதா தொண்டர்களின் நிவாரண பணிகள் மற்றும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவின் செயல்பாடு ஆகியவற்றை பற்றி விவாதிக்க பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தன் வீட்டில் நேற்று ஒரு ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.

அதில், பா.ஜனதாவின் 8 பொதுச்செயலாளர்கள், பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ், கட்சியின் இளைஞர் பிரிவு, மகளிர் பிரிவு, விவசாய பிரிவு, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு, எஸ்.சி., எஸ்.டி. பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு ஆகியவற்றின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுக்கு பிந்தைய வன்முறை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பிறகு, ஜே.பி.நட்டாவும், மற்றவர்களும் பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டனர்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ், ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



பா.ஜனதாவினரின் கொரோனா நிவாரண பணிகள் குறித்த அறிக்கை, ஜே.பி.நட்டாவிடம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சையின்போது, வென்டிலேட்டர் உள்பட அத்தியாவசியமான மருத்துவ சாதனங்களை கையாள்வதற்காக 1 லட்சம் சுகாதார தன்னார்வலர்களுக்கு பா.ஜனதா சார்பில் பயிற்சி அளிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பழங்குடியினர், மகளிர், விவசாயிகள் ஆகியோருக்கான மத்திய அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த கட்சியின் அந்தந்த பிரிவுகளை கேட்டுக்கொண்டோம்.

5 மாநில தேர்தல்களில், மேற்கு வங்காளத்தில் எங்கள் பலத்தை அதிகரித்துள்ளோம். தமிழ்நாட்டில் 4 இடங்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்சிங் கூறியதாவது:-

மோடி அரசின் 7-ம் ஆண்டு நிறைவையொட்டி, 1 லட்சத்து 71 ஆயிரம் கிராமங்களிலும், 60 ஆயிரம் நகர்ப்புற பகுதிகளிலும் பா.ஜனதா தொண்டர்கள் கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்டனர். 4 லட்சத்துக்கு மேற்பட்ட முதியோருக்கு மருந்துகள் வழங்கப்பட்டன.

1 கோடியே 26 லட்சம் முக கவசங்களும், 31 லட்சம் உணவு பொட்டலங்களும் அளிக்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News