ஆன்மிகம்
தீர்த்தவாரி

திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2021-03-17 08:55 GMT   |   Update On 2021-03-17 08:55 GMT
திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி பங்குனி அஸ்வினி நட்சத்திரமான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருமெய்ஞானத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அசுபதி நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி பங்குனி அஸ்வினி நட்சத்திரமான நேற்று காலை பிரம்மபுரீஸ்வருக்கு கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து தீர்த்தவாரி நடைபெற்றது.

இந்த நாளில் இங்கு நீராடுவது சிறப்பாகும். எனவே ஏராளமானோர் கிணற்று தண்ணீரில் நீராடினர். இந்த நீர் காசிக்கு இணையாக புனித நீராக கருதப்படுகிறது. மேலும் பங்குனி அஸ்வினி நட்சத்திர நாளில் பிரம்மபுரீஸ்வரருக்கு இந்த நீரைக்கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டில் ஒரு நாள் மட்டுமே இந்த கிணற்றில் புனித நீராடுவதற்கு பொதுமக்களும், பக்தர்களுக்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனையொட்டி பிரம்மபுரீஸ்வரருக்கு தீப வழிபாடும் பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பிரம்மபுரீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. பின்னர் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடும் ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News