செய்திகள்
கிரு‌‌ஷ்ணாபுரம் பகுதியில் மழை வெள்ள பாதிப்பை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம

குன்னூரில் மழை வெள்ள பாதிப்பை கலெக்டர் ஆய்வு

Published On 2019-11-19 18:24 GMT   |   Update On 2019-11-19 18:24 GMT
குன்னூரில் மழை வெள்ள பாதிப்பை கலெக்டர் ஆய்வு செய்தார்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 16-ந் தேதி நள்ளிரவு முதல் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அப்போது கிரு‌‌ஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மேலும் 19 வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் குன்னூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன்பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் கூறியதாவது:-

பலத்த மழையால் குன்னூர் அருகே உள்ள கிரு‌‌ஷ்ணாபுரம், வேளாங்கண்ணி நகர், கன்னிமாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. கிரு‌‌ஷ்ணாபுரம் ஆற்றின் அகலம் குறைவாக உள்ளது. அங்கு பாலங்களை உயர்த்தி கட்டவும், ஆற்றை சுற்றி தடுப்புச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். வேளாங்கண்ணி நகரில் தடுப்புச்சுவர் இடிந்து, வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்குள்ள மக்களுக்கு மாற்று இடங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேலும் கன்னிமாரியம்மன் கோவில் தெருவில் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை கடுமையாக சேதம் அடைந்து உள்ளது. அந்த சாலை விரைவில் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News