செய்திகள்
தீக்குளிக்க முயன்ற வயதான தம்பதி- கைதான சந்தானம்.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2019-11-25 12:11 GMT   |   Update On 2019-11-25 12:11 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 82). இவரது மனைவி சரசம்மாள் (78). இவர்கள் 2 பேரும் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென அவர்கள் கொண்டு வந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டனர். இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார் உடனே அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தீ குளிப்பதை தடுத்தனர்.

இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் கூறியதாவது:-

எங்களுக்கு சொந்தமான 2¾ சென்ட் இடம் உள்ளது. எங்கள் பேரன் செல்வராஜ் என்பவர் அந்த இடத்தை தானமாக பெற்றதாக உயில் எழுதி வாங்கி விட்டார். எழுதப்படிக்க தெரியாத எங்களிடம் பெற்ற அந்த நிலத்தை ரூ.18 லட்சத்துக்கு விற்பனை செய்ய முயற்சி செய்கிறார். ஏமாற்றி எழுதி வாங்கிய பத்திரத்தை ரத்து செய்து எங்கள் நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

முதியவர்கள் என்பதால் அவர்களை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோன்று திருப்பூர் மங்கலம் ரோடு பழக்குடோன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் (51). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றினார். இதைப்பார்த்த போலீசார் அவர் மீதும் தண்ணீர் ஊற்றி தீ குளிப்பை தடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சந்தானம் கூறும்போது, எனது உறவினர்களிடம் ரூ.3 ஆயிரத்து 500 வாங்கினேன். அதில் ரூ.2 ஆயிரத்து 800- ஐ திருப்பி செலுத்தி விட்டேன். மீதிபணத்தை கந்து வட்டி போல் அதிக வட்டி கேட்கிறார்கள் என்று கூறினார். இதனையடுத்து சந்தானத்தை போலீசார் கைது செய்தனர்.

இன்று ஒரே நாளில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News