செய்திகள்
சென்னை விமான நிலையம்

வெளிமாநில விமானப்பயணிகள் வரத்து திடீரென குறைந்தது

Published On 2020-09-22 08:54 GMT   |   Update On 2020-09-22 08:54 GMT
சென்னை உள்நாட்டு முனையத்தில் அதிகரித்து வந்த பயணிகளின் எண்ணிக்கை திடீரென குறைந்ததற்கு இ-பாஸ் குளறுபடிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை:

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இயக்கப்படும் விமானங்களில் படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கையும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தன.

நேற்று 128 விமானங்கள் இயக்கப்பட்டு 13 ஆயிரம் பேர் பயணித்தனர். இன்று 121 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் சுமார் 8 ஆயிரம் பேரே பயணிக்க முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையிலிருந்து வெளிமாநிலங்கள், மாவட்டங்களுக்கு செல்லும் 60 விமானங்களில் சுமார் 3,300 பேரும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் 61 விமானங்களில் சுமார் 4,700 பேர்கள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை உள்நாட்டு முனையத்தில் அதிகரித்து வந்த பயணிகளின் எண்ணிக்கை திடீரென ஒரே நாளில் சுமார் 5 ஆயிரம் பயணிகள் குறைந்ததற்கு என்ன காரணம் என்று விமானநிலைய அதிகாரிகளை கேட்டதற்கு, பயணிகள் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் வழக்கமானதுதான் என்று கூறுகின்றனர்.

ஆனால் பயணிகள் தரப்பிலோ, சென்னை விமான நிலையத்தில் நடந்த இ-பாஸ் குளறுபடிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் மாநில அரசு அமைத்திருந்த இ-பாஸ் கவுண்டர்கள் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மூடப்பட்டன.

இனிமேல் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள், புறப்படும் இடங்களிலேயே இ-பாஸ்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து எடுத்து கொண்டு தான் சென்னைக்கு வரவேண்டும். சென்னை விமானநிலையத்தில் இ பாஸ் கவுண்டர்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் சென்னை விமானநிலையத்தில் வெளி மாநிலத்திலிருந்து வரும் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஞாயிறு மாலையிலிருந்து மீண்டும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முணையத்தில் இ-பாஸ் கவுண்டர்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த குளறுபடிகளால் தான் வெளிமாநில பயணிகள் சென்னைக்கு விமானங்களில் வர தயங்குகின்றனர் என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தற்போது இ பாஸ் கவுண்டர்கள் மீண்டும் செயல்பட தொடங்கி விட்டதால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்போது புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புறப்படும் நாட்டில் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்று 96 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள்ளாக அவர்கள் வரக்கூடிய இடத்துக்கு வந்ததாக வேண்டும். குறித்த நேரத்திற்குள் வரவில்லை என்றால் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்ற புதிய விதிமுறை உள்ளது.

இதன் காரணமாக பன்னாட்டு முனையத்தில் மேலும் ஒரு கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படுகிறது. இதனை தனியார் மருத்துவமனை அமைக்கிறது.
Tags:    

Similar News