செய்திகள்

பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2018-07-25 09:11 GMT   |   Update On 2018-07-25 09:11 GMT
நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் பெரியாறு, வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. #PeriyarDam #VaigaiDam
கூடலூர்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் உயரத் தொடங்கியது. 2 நாட்களாக மழை இல்லை. தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் அணைக்கு நீர் வரத்து 2473 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து 2100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணை நீர் மட்டம் 53.12 அடியாக உள்ளது. 1832 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.95 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 120.86 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 26, தேக்கடி 22, கூடலூரில் 23.3, சண்முகாநதி அணை 17, உத்தமபாளையம் 27, வீரபாண்டி 1, வைகை அணை 1, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும் முல்லைப் பெரியாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் ஆற்றை கடக்க, குளிக்க, துணி துவைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் சார்பில் முல்லைப் பெரியாறு கரையோரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அவசர கால உதவிக்கு பொதுமக்கள் வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க அந்தந்த வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077 மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #PeriyarDam #VaigaiDam

Tags:    

Similar News