செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டம்

Published On 2021-11-24 07:02 GMT   |   Update On 2021-11-24 07:02 GMT
திருப்பூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 86 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 35 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை 17 லட்சத்து 22 ஆயிரத்து 744 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 79 ஆயிரத்து 187 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 13 லட்சத்து 1,376 ஆண்களும், 12 லட்சத்து 97 பெண்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை 22 லட்சத்து 61 ஆயிரத்து 790 பேருக்கும், கோவேக்ஷின் தடுப்பூசியை இரண்டு லட்சத்து 36 ஆயிரத்து 763 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 18 வயதை கடந்த 15 லட்சத்து 31 ஆயிரத்து 191 பேரும், 45 வயதை கடந்த 6 லட்சத்து 34 ஆயிரத்து 747 பேரும், 60 வயதை கடந்த 3 லட்சத்து 35 ஆயிரத்து 995 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது:

மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 86 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 35 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். 18 வயதை கடந்த அனைவரும் நவம்பர் 30-ந்தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவர் முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். இந்தநிலையில் கிராமங்களில் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி கொண்ட ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்து, 100 சதவீத தடுப்பூசி தூதர்களாக நியமித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இம்மாத இறுதிக்குள் 100 சதவீத முதல் தவணை தடுப்பூசியும், 60 சதவீத இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்த சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு, தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் இரண்டு ‘டோஸ்’ செலுத்தியவருக்கு ‘நான் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவன். 

நீங்கள் முழுமையாக செலுத்திக் கொண்டீர்களா? என்ற ‘பேட்ஜ்’ வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை பார்க்கும் சக பணியாளரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டுவர் என்பதால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

மாவட்ட மற்றும் கிராம அளவிலும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில் ஆர்வமுள்ளவர்களை தேர்வு செய்து தடுப்பூசிக்கான தூதர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:

30க்கும் அதிகமான மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு உறுதியாகி வருகிறது. 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி பேட்ஜ், தூதர் மூலம் விழிப்புணர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன என்றனர்.
Tags:    

Similar News