ஆன்மிகம்
நாமக்கல் அரங்கநாதர் கோவில்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் டோக்கன் விநியோகம் தொடக்கம்

Published On 2020-12-23 06:19 GMT   |   Update On 2020-12-23 06:19 GMT
நாமக்கல்லில் அமைந்துள்ள குடவறை கோவிலான பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சாமி கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.
நாமக்கல்லில் அமைந்துள்ள குடவறை கோவிலான பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சாமி கோவிலில் வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொரோனா நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதிகாலையில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதியில்லை. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமிதரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு முன்பதிவு முறையில் 750 பேர், இலவச தரிசன முறையில் 750 பேர் என மொத்தம் 1500 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாமக்கல் அரங்கநாதர் கோவில் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.

பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்தும், செல்போன் எண்ணைத் தெரிவித்தும் டோக்கன்களை பெற்று செல்கின்றனர். வைகுண்ட ஏகாதசி நாளன்று அரங்கநாதரை தரிசிக்க வரும் பக்தர்கள் முன்னதாக டோக்கன் பெற்றிருந்தால் மட்டுமே கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News