வழிபாடு
திரிவிக்கிரம நாராயணபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சீர்காழி பகுதி பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி உற்சவம்

Published On 2022-01-12 07:29 GMT   |   Update On 2022-01-12 07:29 GMT
சீர்காழி பகுதி பெருமாள் கோவில்களில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தில் பெருமாளை நினைத்து தாயார் மற்றும் ஆண்டாள் பாவை நோன்பை நிறைவு செய்யும் நாள் கூடாரவல்லி என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கல் செய்து தாயாருக்கும், ஆண்டாளுக்கும் படைப்பதாக ஐதீகம்.

இந்த நாளில் பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டால் கூடாத காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று கூடாரவல்லியையொட்டி நாங்கூர் வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான செம்பொன் அரங்கர் கோவிலில் பால், வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றான திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் கூடாரவல்லி நடந்தது. இதனையொட்டி பெருமாள், தாயார் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

பின்னர் நெய்யினால் ஆன சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், பக்தர்கள், கைங்கர்ய சபா தலைவர் ரகுநாதன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் 108 திவ்ய தேச கோவில்களில் ஒன்றான சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது. இந்த கோவிலின் மூலவரான உலகளந்த பெருமாள், லோகநாயகி தாயார் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை ஆதீனம் சீனிவாச சுவாமிகள் செய்திருந்தார்.

இதேபோல் தலச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், நல்லூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு திவ்யதேச கோவில்களில் கூடாரவல்லி உற்சவம் நடந்தது.
Tags:    

Similar News