செய்திகள்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

முன்னாள் அமைச்சரை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-07-03 03:22 GMT   |   Update On 2021-07-03 03:22 GMT
மணிகண்டன் நடிகையுடன் பேசுவதற்காக தனியாக ஒரு செல்போனை பயன்படுத்தியுள்ளார். அது மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை:

திருமணம் செய்துகொள்வதாக கூறி நடிகையை ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மணிகண்டன் தாக்கல் செய்துள்ள மனு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதேநேரம், 5 நாட்கள் மணிகண்டனை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு போலீசார் தாக்கல் செய்த மனுவை சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து போலீசார் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது போலீஸ் தரப்பில், மணிகண்டன் நடிகையுடன் பேசுவதற்காக தனியாக ஒரு செல்போனை பயன்படுத்தியுள்ளார். அது மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் மதுரைக்கு மணிகண்டனை அழைத்துச்சென்று விசாரிக்க வேண்டியதுள்ளது என்று வாதிடப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணிகண்டன் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.எஸ்.தினகரன் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ‘மணிகண்டனை 2 நாட்கள் (இன்று மற்றும் நாளை) போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குகிறேன். போலீஸ் காவலில் மணிகண்டனை விசாரிப்பதை ஊடகங்கள் செய்தி வெளியிடக்கூடாது. சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடைபெற வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News