செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அடுத்த வெளிநாட்டு பயணம் இஸ்ரேல் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

Published On 2019-09-10 06:30 GMT   |   Update On 2019-09-10 06:30 GMT
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது பற்றி ஆராய இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- உங்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம் பிற நாடுகளுக்கும் தொடருமா?

பதில்:- நிச்சயமாக தொடரும். அடுத்தது இஸ்ரேல் செல்ல விருக்கிறோம். ஏனென்றால், தமிழகத்தில் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தக்கூடிய தண்ணீரை இஸ்ரேலில் 7 ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன வசதியை புகுத்தியிருக்கிறார்கள். அந்தளவிற்கு தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் நாடு இஸ்ரேல். அதுமட்டு மல்லாமல், கழிவு நீரை மறுசுழற்சி செய்து விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். நம் மாநிலத்தில் பருவமழை பொய்த்து விவசாயிகள் பாதிக்கப்படுவதால், நீரை சிக்கனமாக பயன்படுத்துதலை அறிந்து வருவதற்கு இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருக்கின்றோம்.

கேள்வி:- பல்வேறு துறைகளின் முதலீட்டாளர்களுடன் நீங்கள் பேசியிருக்கிறீர்கள், எந்தத் துறையில் தமிழகத்தில் அதிக முதலீடு செய்ய விருப்பமாக இருக்கிறார்கள்?

பதில்:- எல்லாத்துறையிலும் முதலீடு செய்வதற்கு விருப்பமாக இருக்கிறார்கள். பலர் மருத்துவத்துறையிலிருந்து என்னை சந்தித்தார்கள். மருத்துவத்துறை தொடர்பாக அவர்கள் இங்கே தொழில் துவங்க ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் தொழில் முனைவோர் இருக்கின்றார்கள். தமிழ்நாடு அனைத்து வசதிகளும் உள்ள ஒரு மாநிலமாக இருப்பதால், தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றார்கள்.

கேள்வி:- வெளிநாடுகளில் பொருளாதார மந்தநிலை நிலவக்கூடிய நிலையில், தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதலீட்டில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமென்று நினைக்கின்றீர்களா?

பதில்:- பாதிப்பு ஏற்படுமென்றால் எப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவார்கள்? இந்தியாவில் தொழில் துறையில் இரண்டாவதாகவும், சிறு தொழிலில் முதன்மையாகவும் இருப்பது தமிழ்நாடு. இவையெல்லாம் தெரிந்து தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இங்கே தொழில் முதலீட்டாளர்கள் தொழில் துவங்குகின்ற பொழுது வேலை செய்வதற்குத் தேவையான ஆட்கள் அவர்களுக்கு கிடைக்கின்றனர்.

நம்முடைய தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் கல்வி கற்று வெளிநாட்டில் அதிக நபர்கள் உயர்ந்த நிலையில் உள்ளனர். அப்படிப் பட்டவர்களை இங்கே பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் எண்ணுகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் புதிய தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கேள்வி:- வெளிநாடுகளில் தமிழை கொண்டு சேர்க்கக்கூடிய வகையில், லண்டன் மாநகரில் தமிழில் உரையாற்றினீர்கள், அந்த அனுபவம் எப்படி உள்ளது?

பதில்:- தமிழில் உரையாற்றுவது பெருமையாக உள்ளது. நம்முடைய கருத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால் அவரவர் மொழியில் சொன்னால்தான் அவர்களுக்கும் புரியும். நம்முடைய நோக்கம் தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும்., நம்முடைய இந்தியாவின் பல மாநிலங்களில் பல மொழிகளில் பேசுகின்றவர்கள் கூட தமிழகத்தில் தொழில் துவங்க ஆர்வம் காட்டுகின்றனர்,

வெளிநாட்டில் இருக்கின்ற தொழில் முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களெல்லாம் தமிழகத்திற்கு வர வேண்டுமென்று சொன்னால், அவர்களுக்கு புரிகின்ற மொழியில் பேசினால்தான் அவர்கள் தெரிந்துகொண்டு, இங்கே வந்து புதிய தொழில் துவங்குவார்கள். அந்த அடிப்படையில், சில நேரங்களில் ஆங்கிலத்திலும், சில நேரங்களில் தமிழிலும் பேசினேன்.

கேள்வி:- எந்தளவிற்கு தமிழ் முதலீட்டாளர்களிடம் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது?

பதில்:- இப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்பொழுதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது என்று அனைத்துத் தமிழர்களும் ஆர்வத்தோடு கைதட்டி, ஆரவாரத்தோடு, மகிழ்ச்சி தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வெளிநாட்டிற்குச் சென்று தொழில் துவங்கிய தொழிலதிபர்கள், தமிழகத்திற்கு வந்து தொழில் துவங்குவதற்கு இந்த “யாதும் ஊரே” திட்டம் ஒரு மைல் கல்லாக அமையுமென்று பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News