ஆன்மிகம்
காவிரி கரையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

காவிரி கரையில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா: வீடுகளிலேயே பெண்கள் வழிபாடு

Published On 2020-08-03 02:53 GMT   |   Update On 2020-08-03 02:53 GMT
கொரோனா ஊரடங்கால் திருச்சி காவிரி கரையில் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. வீடுகளிலேயே பெண்கள் வழிபாடு நடத்தினர்.
பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு தினத்தில் அம்மா மண்டபம் படித்துறை, முக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு காவிரி தாய்க்கு படையலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

முழுஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கை கொண்டாட காவிரி ஆற்றுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என்று காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது. அம்மா மண்டபம் படித்துறை உள்ளிட்டவை ஆட்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

மோட்டார் சைக்கிளில் காவிரி ஆற்றுக்கு வந்த ஒரு சில புதுமண ஜோடிகளையும் போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலானோர் வீடுகளிலேயே காவிரி தாயை மனதில் நினைத்து வழிபாடு நடத்தினர். உள்ளூர் பகுதிகளை சேர்ந்த ஒரு சில குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதிகள் மட்டும் ஆங்காங்கே காவிரி கரையோரத்தில் வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் ஆங்காங்கே காவிரி கரையோரத்தில் நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அதே சமயம் மயிலாடுதுறையில் தடையை மீறி பெண்கள் காவிரி கரையில் ஒன்று கூடி வழிபாடு நடத்தினார்கள். அப்போது புதுமண தம்பதிகள் பழவகைகளை வைத்து காவிரி அன்னையை வேண்டி கொண்டனர். இளம்பெண்கள் தங்கள் குடும்பத்துடன் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெண்கள் காவிரி கரையில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை மற்றும் காவிரிக்கரை வெறிச்சோடி காணப்பட்டதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் தங்களுடைய வீடுகளிலேயே சிறப்பு வழிபாடு நடத்தினர். சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றங்கரையில் திரளுவார்கள். முழு ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டதால் ஒகேனக்கல் நேற்று பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.

ஆடிப்பெருக்கையொட்டி நேற்று காவிரி ஆற்றில் யாரும் நீராடக்கூடாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நேற்று மேட்டூரில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. அதே நேரத்தில் பொதுமக்கள் வருகையை கண்காணிக்க மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
Tags:    

Similar News