செய்திகள்
சவுரவ் கங்குலி

தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்த முடியாது - கங்குலி சொல்கிறார்

Published On 2021-05-10 19:44 GMT   |   Update On 2021-05-10 19:44 GMT
கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்களை கொரோனா தாக்கியதால் கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது
புதுடெல்லி:

தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி வீரர்களை கொரோனா தொற்று தாக்கியதால் கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பவுலர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு முதலில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இரு தினங்களுக்குள் 4 அணியினருக்கு பரவியது. இதனால் வேறுவழியின்றி இந்த போட்டி நிறுத்தப்பட்டது. இந்த தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. எஞ்சிய ஆட்டங்கள் நடைபெற முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.



தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவோ அல்லது பிறகோ நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுக்கும் என்று தெரிகிறது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் கடந்த ஆண்டு போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதேநேரத்தில் இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்த இங்கிலாந்தை சேர்ந்த கவுண்டி கிளப் அணிகள், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகியவை விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நிறைய கொரோனா தடுப்பு விதிமுறைகள் தள்ளி போடப்பட்ட ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் மீண்டும் நடத்துவதற்கு இடையூறாக இருக்கின்றன. தனிமைப்படுத்துதலை கையாள்வது என்பது கடினமான காரியமாகும். இதனால் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது. ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் எந்த இடத்தில், எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இவ்வளவு சீக்கிரமாக எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐ.பி.எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அளித்த ஒரு பேட்டியில், ‘தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்க முடிவு செய்தாலும் அது இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் என்று நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியின் போது வீரர்கள் தனி விமானத்தில் பயணம் செய்தாலும் விமான நிலைய சோதனை மற்றும் அங்குள்ள வழிகளை கடந்து வருகையில் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த அணியிடம் இருந்து கொரோனா தொற்று பரவியது என்பது உறுதியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் ஒரே இடத்தில் மொத்தமாக சந்திக்கும் போது எல்லா நடைமுறைகளையும் நேர்த்தியாக பின்பற்றுவது என்பது கடினமான விஷயமாகும்.

என்னை பொறுத்தமட்டில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தான் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இந்த போட்டியில் விளையாட முடிவு செய்து வந்த பிறகு போட்டி நிறைவு பெறுவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் திரும்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. மற்ற வீரர்களுக்கு வேறுபட்ட எண்ணம் இருந்து இருக்கலாம். ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் அணியினர் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டு சில ஆட்டங்களை தவிர்த்து மீண்டும் திரும்புவார்கள் என்று நினைத்தேன். ஒரே நேரத்தில் பல அணிகளுக்கு கொரோனா விரைவாக பரவியது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக தற்போது எல்லோரும் தடுப்பூசி எடுத்து வரும் நிலையில் போட்டி மீண்டும் தொடங்கினால் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன்’ என்று கூறினார்.
Tags:    

Similar News