செய்திகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருப்பதை காணலாம்.

திருக்கானூர்பட்டியில் 21ந் தேதி ஜல்லிக்கட்டு- 600 காளைகள், 400 வீரர்கள் பதிவு

Published On 2021-02-18 05:41 GMT   |   Update On 2021-02-18 05:41 GMT
திருக்கானூர்பட்டியில் வருகிற 21-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி 600 காளைகளும், 400 வீரர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
பிள்ளையார்பட்டி:

தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கல் விழாவையொட்டி வருகிற 21-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை)ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைக்கிறார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர் சஞ்சய், திருக்கானூர்பட்டி பங்குத்தந்தை தேவதாஸ்இக்னேசியர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அரசு விதிகளுக்கு உட்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. காளைகளை அவிழ்த்துவிடக்கூடிய வாடிவாசல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் காளைகளை வரிசையாக அழைத்து வருவதற்காக தனி பாதை இரும்பு கம்பிகள், கட்டைகளை கொண்டு அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அமர்ந்து இருக்கும் பகுதிகளுக்குள் காளைகள் நுழைந்துவிடாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்படும். இந்த காளைகளை முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி இதுவரை 600-க்கும் மேற்பட்ட காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காளைகளை பிடிப்பதற்காகவும் பிற மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் ஆர்வத்துடன் வருவார்கள். அவர்களது பெயரும் பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை 400 பேர் பதிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தும் வகையில் திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர், அன்னை இளைஞர் இயக்கத்தினர், ஊர் பொதுமக்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளில் மாடுபிடி வீரர்கள், மாட்டு உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்னை இளைஞர் இயக்கத்தினர் சார்பில் திருக்கானூர்பட்டி புனித அந்தோணியார் கோவில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News