செய்திகள்
ராஜேஷ் தோபே

மகாராஷ்டிராவில் 18 முதல் 44 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைப்பு

Published On 2021-05-13 01:48 GMT   |   Update On 2021-05-13 01:48 GMT
கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை காரணமாக 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை நிறுத்திவைத்து இருப்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனா 2-வது அலை மக்களை வாரி சுருட்டி, ஏராளமான உயிர்களை காவு வாங்கி வருகிறது.

கொரோனாவின் கொட்டத்தை ஒடுக்க கடந்த ஒரு மாதமாக ஊரடங்கிற்கு இணையான கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் அமலில் உள்ளது. நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது

இதன் காரணமாக கொரோனாவின் ஆதிக்கம் சற்று தணிந்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளது. மும்பை, தானே உள்பட 15 மாவட்டங்களில் தொற்று நோய் குறைந்து இருக்கும் நிலையில், மற்ற மாவட்டங்களில் பரவல் வேகம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கொரோனாவை ஒடுக்கும் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக தடுப்பூசி உள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணியை மராட்டிய அரசு தீவிரப்படுத்தியது. இதற்காக மாநிலம் முழுவதும் ஏராளமான தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டன. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அவற்றில் பல மையங்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது.

இதற்கு மத்தியில் 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்தது. தடுப்பு மருந்து தட்டுப்பாட்டுக்கு மத்தியில் கிடைக்கும் மருந்தின் அடிப்படையில், இந்த வயது பிரிவினருக்கு மத்திய அரசு அனுமதியுடன் கடந்த 1-ந் தேதி முதல் மராட்டிய அரசு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தது.

இதன் காரணமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும் அவர்களில் பலருக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போட முடியவில்லை. எனவே பல மையங்களில் தடுப்பூசிக்காக மக்கள் காத்து கிடக்கும் அவலம் நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தடுப்பூசி பிரச்சினை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்த பிறகு சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-

45 வயதினருக்கு மேற்பட்டவர்களுக்கு போதுமான தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கவில்லை. எனவே அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே 18 வயது முதல் 44 வயது பிரிவினருக்காக வாங்கப்பட்ட தடுப்பு மருந்தை 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்த உள்ளோம். இதன் காரணமாக 18 முதல் 44 வயது பிரிவினருக்கு தடுப்பூசி போடும் பணியை சில காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளோம்.

வருகிற 20-ந் தேதிக்கு பிறகு தான் 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசி மருந்தை தர முடியும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் சீரம் நிறுவன தலைவர் ஆதார் பூனாவாலா கூறியுள்ளார். அதன்படி தடுப்பு மருந்து கிடைக்கும் பட்சத்தில் 18 முதல் 44 வயது பிரிவினருக்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டால், கொரோனா பரவலை தடுக்க முடியாது என்று நிபுணர்கள் எச்சரித்து உள்ள நிலையில், மராட்டியத்தில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News