செய்திகள்
கனிமொழி

கனிமொழி தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-01-31 00:19 GMT   |   Update On 2020-01-31 00:19 GMT
நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி எம்.பி. வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த நவம்பர் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவையும், தனக்கு எதிரான தேர்தல் வழக்கையும் ரத்து செய்யக்கோரி கனிமொழி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

கடந்த டிசம்பர் 9-ந் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது எதிர்மனுதாரர் சந்தானகுமார் பதில்மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கனிமொழி தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜரானார்.



அப்போது அவர், ‘சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் சில பகுதிகளை வாசித்து சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் எங்கள் மனுவின் மீது இங்கும் எதிர்மனுதாரருக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ள நிலையில் ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் தேர்தல் கமிஷன் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News