செய்திகள்
போகி பண்டிகை கொண்டாட்டம்

சென்னையில் இந்த ஆண்டு போகி புகை அதிகம் இல்லை

Published On 2021-01-13 02:55 GMT   |   Update On 2021-01-13 06:23 GMT
போகி பண்டிகையான இன்று சென்னையில் புகை மூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான தெருக்களில் பழைய பொருட்கள் எரிக்கப்படவில்லை.
சென்னை:

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரும் போகி பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. போகி பண்டிகையன்று பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் போகி பண்டிகையன்று பனி மூட்டம் கடுமையாக இருக்கும். அதேநேரத்தில் பழைய பொருட்களையும் அதிகம் தெருக்களில் எரிப்பார்கள். பனி மூட்டத்துடன் பழைய பொருட்களை கொளுத்துவதால் ஏற்படும் புகையும் சேரும்போது சென்னை நகரம் முழுவதும் கடும் புகை மண்டலமாக காணப்படும்.

இதன் காரணமாக அதிகாலை மற்றும் காலை வேளையில் சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் திணறியபடியே வரும். காலையிலும் வழக்கமாக புகை மூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே செல்வார்கள். புகை மண்டலத்தால் விமான போக்குவரத்தும் பாதிக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு போகி பண்டிகையான இன்று சென்னையில் புகை மூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான தெருக்களில் பழைய பொருட்கள் எரிக்கப்படவில்லை. சென்னையில் உள்ள தெருக்களில் மிக மிக குறைந்த அளவிலேயே சிறுவர்கள் பழைய பொருட்களை எரித்து மேளம் அடித்தனர்.

தெருக்களில் பழைய பொருட்களை எரிப்பது குறைந்ததன் காரணமாக சென்னையில் புகை மூட்டம் அதிகம் இல்லை. சென்னையில் கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பனியின் தாக்கம் குறைந்துள்ளது. அத்துடன் புகையும் குறைந்ததால் சென்னையில் இன்று வாகன ஓட்டிகள் புகை மண்டல பாதிப்புக்கு ஆளாகவில்லை.
Tags:    

Similar News