செய்திகள்
கோவக்குளம் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

கோவக்குளம் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Published On 2021-02-19 14:13 GMT   |   Update On 2021-02-19 14:13 GMT
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள கோவக்குளம் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்:

கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட வீரராக்கியம், கட்டளை, கோவக்குளம் ஆகிய பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் நெல் அறுவடை நேரத்தில் மட்டும் திறக்கப்பட்டு செயல்படும். இந் நிலையில் தற்போது நெல் அறுவடை நேரம் என்பதால் கட்டளை, வீரராக்கியம் ஆகிய பகுதிகளில் ஒரு மாதமாக நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட தொடங்கின. இந்நிலையில் கோவக்குளம் பகுதியில் தை பொங்கலுக்கு பிறகு திறக்க வேண்டிய நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நிலையில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனால் சுமார் 150 டன் நெல் வயலிலும், வீடுகளிலும், பனியிலும் தேங்கி உள்ளது. எனவே உடனடியாக கோவக்குளம் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் நேற்று கிருஷ்ணராயபுரம்- பஞ்சப்பட்டி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார், வேளாண் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் கூறுகையில், நாளை (அதாவது இன்று) முதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கிருஷ்ணராயபுரம்- பஞ்சப்பட்டி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News