செய்திகள்
கோப்பு படம்.

சுசீந்திரம் அருகே உச்சிமாகாளி அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகள் கொள்ளை

Published On 2021-01-30 15:03 GMT   |   Update On 2021-01-30 15:03 GMT
சுசீந்திரம் அருகே உச்சிமாகாளி அம்மன் கோவிலில் தங்கம்-வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை கண்காணிப்பு கேமரா பதிவை வைத்து போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
மேலகிருஷ்ணன்புதூர்:

சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் மறுகால் தலையில் உச்சிமாகாளி அம்மன் புல மாடன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேரூரை சேர்ந்த ராமசாமி பூசாரியாக உள்ளார். அவர் நேற்று காலை கோவிலுக்கு வந்த போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, 4 கிராம் தங்கம், ½ கிலோ வெள்ளி நகைகள், ரூ.4 ஆயிரத்து 850 மற்றும் உண்டியல் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுபற்றி ஊர் தலைவர் சரவணனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுபற்றி சுசீந்திரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது, 2 நபர்கள் கோவிலுக்கு வந்ததும், அதில் ஒருவர் வெளியே 2 அரிவாளுடன் நின்று கொண்டிருக்க மற்றொருவர் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்தது பதிவாகி இருந்தது. பூட்டை உடைத்த நபர் நீலநிற சட்டை அணிந்திருந்தார்.

இந்த கோவிலில் சுமார் நான்கு வருடத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சாமிசிலையை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News