செய்திகள்
பாஜகவில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி

பாஜக-வில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி

Published On 2020-12-07 17:52 GMT   |   Update On 2020-12-07 17:52 GMT
பிரபல நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார்.
ஐதராபாத்:

தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.

அந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.

அந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 

பின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி விலகி பாஜகவில் சேர உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவி வந்தன.

இந்நிலையில், நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லி சென்ற விஜயசாந்தி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார். 

பாஜகவில் சேர்ந்தது தொடர்பாக விஜயசாந்தி கூறுகையில், ‘நான் இன்று பாஜகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 2023-ம் ஆண்டு தெலுங்கானாவில் நாங்கள் (பாஜக) ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை உள்ளது. சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா எந்த வளர்ச்சியும் அடையவில்லை’ என்றார்.

முன்னதாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   
Tags:    

Similar News