ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்ட போது எடுத்த படம்.

கொரோனா குறைந்த பிறகு ராமேசுவரம் கோவிலில் 22 தீர்த்தங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

Published On 2021-09-27 07:33 GMT   |   Update On 2021-09-27 07:33 GMT
கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கி விட்டது என்ற நம்பிக்கை வந்தவுடன் உடனடியாக பக்தர்களின் கோரிக்கை விருப்பப்படி ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு நேற்று மாலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வந்தார். அவருக்கு தக்கார் ராஜா குமரன் சேதுபதி, கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து வரவேற்றனர். தொடர்ந்து அமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானை ராமலட்சுமிக்கு பழம் கொடுத்தார்.அதன் பின்னர் சாமி தரிசனம் செய்தார்.

தீர்த்த கிணறு பகுதிகளையும், 3 பிரகாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கத்தேர், வெள்ளிதேர் உள்ளிட்டவைகளை பார்த்தார். ஆய்வின்போது ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இந்து அறநிலையத்துறையின் ஆணையாளர் குமரகுருபரன், கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க. கட்சியின் நகரச்செயலாளர் நாசர்கான், வீட்டுவசதி வாரிய தலைவர் அயோத்தி ராஜன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் வில்லாயுதம், கோவிலின் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், பேஷ் கார்கள் கமலநாதன், முனியசாமி, ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

ஆய்விற்கு பின்பு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

ராமேசுவரம் கோவிலில் உள்ள தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் ஆகியவை சரியான முறையில் பராமரிப்பில்லாமல் பயனற்று போய் கிடப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே தங்கத்தேர், வெள்ளிதேர் மற்றும் 3 மரத்தேர்களையும் உடனே சீரமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சீரமைக்க முடியாவிட்டால் அதற்கு பதிலாக புதிய தேர் செய்யலாமா என்பது குறித்தும் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.தேவைப்பட்டால் ராமேசுவரம் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர், வெள்ளித்தேர் மற்றும் மரத்தேர் செய்து கொடுக்க இந்து அறநிலையத்துறை தயாராக உள்ளது.

கொரோனா தொற்று நம்மை விட்டு நீங்கி விட்டது என்ற நம்பிக்கை வந்தவுடன் உடனடியாக பக்தர்களின் கோரிக்கை விருப்பப்படி ராமேசுவரம் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம்போல் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள். ராமேசுவரம் கோவிலில் வருங்கால வைப்பு நிதி மற்றும் டிக்கெட் முறைகேடு குறித்து அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் இந்து அறநிலையத் துறையில் எந்த தவறுகள் செய்யப்பட்டிருந்தாலும் அது குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது இந்து அறநிலையத் துறை அமைச்சரிடம் தீர்த்தம் இறைத்து ஊற்றும் யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் அனைவரும் தீர்த்த கிணறுகளை நம்பி 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருவதாகவும் மூடப்பட்டு இருப்பதால் அனைத்து குடும்பங்களும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். தீர்த்தங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், வர்த்தக சங்கம், அக்னி தீர்த்த புரோகிதர்கள் சங்கம், சலவைத் தொழிலாளர் சங்கம் சன்னதி தெரு மற்றும் கோவிலை சுற்றியுள்ள குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிப்பதாக கூறிவிட்டு அமைச்சர் புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News