ஆன்மிகம்
கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட போது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது

Published On 2021-03-08 07:53 GMT   |   Update On 2021-03-08 07:53 GMT
குமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு மாசித்திருவிழாவையொட்டி பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை நாளை நடக்கிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இந்த கோவிலில் மாசித் திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

விழாவின் 9-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, அதைத்தொடர்ந்து பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 11 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு, மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை அதன்பிறகு மாவிளக்கு ஊர்வலம், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், மாபெரும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது.

பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்துக்கு இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்குகிறார். மண்டைக்காடு பகவதி அம்மன் பெரிய சக்கர தீவட்டி முன்னேற்ற கமிட்டி தலைவர் முருகன், உதவி தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் நேசமணி, உதவி செயலாளர் கோபாலகிருஷ்ணன் அகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

முதல் விளக்கை குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோகன் ஏற்றி வைக்கிறார். இதில் கருமன் கூடல் தொழில் அதிபர்கள் கல்யாணசுந்தரம், மனோகர் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள்.

விழாவில் கடைசி நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வருதல், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு இன்னிசை விருந்து, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை நடக்கிறது.

இந்த பூஜையில் சிறப்பம்சமாக பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் அடங்கிய சுமார் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சுத்தமான முறையில் விரதம் இருந்து தயார் செய்யப்படுகிறது.

பின்னர் சன்னதி அருகில் உள்ள சாஸ்தான் கோவில் பக்கமிருந்து ஒடுக்கு பூஜை பவனி வருகிறது. பூஜைக்கு எடுத்து செல்லப்படும் உணவு வகைகளை பானைகளில் வெள்ளைத் துணியால் மூடி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பூஜைக்கான உணவு வகைகளை வாய்ப்பூட்டு கட்டி பூசாரிகள் தலையில் சுமந்து கோவிலுக்கு எடுத்து வருகிறார்கள். பின்னர் கோவிலை ஒருமுறை வலம் வந்து அம்மன் முன்பு உணவு வகைகள் வைக்கப்படும் பின்னர் நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு நடை திறக்கப்பட்டு ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பூஜை காண கோவில் வளாகத்திலும், ஒடுக்கு பவனி வரும் வளாகத்திலும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.
Tags:    

Similar News