லைஃப்ஸ்டைல்
மார்பக சுய பரிசோதனை

மார்பக சுய பரிசோதனையின் அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள்...

Published On 2021-08-17 04:27 GMT   |   Update On 2021-08-17 04:27 GMT
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர்.
முதலில் பெண்கள் மார்பக சுய பரிசோதனையை அடிக்கடி செய்து வர வேண்டும். அப்படி செய்வதாலேயே மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை எளிதில் கண்டுபிடிக்கலாம். மாதந்தோறும் மாதவிடாய் நாட்கள் முடிந்த பிறகு பரிசோதனை செய்வது தான் சரியானது. ஒருசிலருக்கு மாதவிடாய் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பு மார்பகங்களில் வலி ஏற்படலாம். அப்போது சுய பரிசோதனை செய்வது தவறு. கண்ணாடி முன்பு நின்று மார்பகங்களை பார்க்க வேண்டும். ஏதாவது மாற்றம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். பின்னர் புண், அரிப்பு, நிற மாற்றம் உள்ளதா என்று கவனியுங்கள். இடது கையால் வலது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும்.

அதேபோல வலது கையால் இடது மார்பகத்தை நன்றாக அழுத்தியும், தடவியும் பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது ஏதாவது கட்டி இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். சில சமயங்களில் சாதாரண கட்டிகள் கூட மார்பகங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குளிக்கும் போது தினமும் மார்பகங்களை தொட்டு மாற்றம் உள்ளதா என்பது கவனித்து வருவது மிகவும் சிறந்தது. மார்பகங்கள் பற்றி எப்படி மருத்துவரிடம் சந்தேகம் கேட்பது என்று தயக்கம் காட்டினால், பின்விளைவுகள் மோசமாக அமையலாம். ஆரம்ப கட்டத்திலேயே நோயை கண்டுபிடித்தால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விட முடியும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் இப்போது 30 வயதிலேயே பலரும் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன், 30 வயதுக்கு மேல் திருமணம் செய்தல், குழந்தைக்கு தாய்ப்பால் வழங்காமல் தவிர்த்தல், குழந்தைப்பேறு தள்ளிப்போடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. அதோடு அதிகப்படியான புகைப்பழக்கம், மதுப்பழக்கம் கூட புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது.

40 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய அறிவுறுத்துவார்கள். ஆனால் இப்போது 25 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த வயது முதலே ஆண்டுக்கு இரண்டு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருத்துவரை சந்தித்து மார்பகத்தில் ஏதாவது மாற்றம் தென்பட்டால் உடனே அறிவுரை பெறவேண்டும். 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒருமுறை மெமோகிராம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

எதற்காக இப்படி அழுத்தமாக பரிசோதனை செய்து கொள்ள கட்டாயப்படுத்துகிறோம் என்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது சுலபம். நோயின் தீவிரம் அதிகமாகிவிட்டால் குணப்படுத்துவது சிரமமாகிவிடும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோய் பாதிப்பை வைத்து அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி வழங்கப்படும். வலி இல்லாமல் மார்பகத்தில் கட்டி இருந்தால், அது புற்றுநோய் கட்டியாகவும் இருக்கலாம். அந்த சூழலில் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஒருவேளை அது புற்றுநோய் கட்டி என கண்டறியப்பட்டால், சுலபமாக ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை அளித்து நிச்சயம் குணப்படுத்திவிட முடியும்.

அதுவே கட்டியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வலி அதிகமாகும் போது சிகிச்சைக்கு வந்தால் அப்போது சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழப்பு ஏற்படலாம். மூன்றாம், நான்காம் கட்ட புற்றுநோய் என்றால் உயிருக்கு ஆபத்து தான். முதல் இரண்டு கட்டங்கள் பிரச்சனை இல்லை. மருத்துவரிடம் சென்று தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இல்லை. ஆரம்பத்தில் வீட்டில் பெண்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம். அதன்பிறகு கட்டி இருப்பது போல உணர்ந்தால் மருத்துவரிடம் தாமதிக்காமல் செல்ல வேண்டும்.
Tags:    

Similar News