செய்திகள்
நிதின் கட்காரி

ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு உதவும்- நிதின் கட்காரி

Published On 2019-09-06 02:08 GMT   |   Update On 2019-09-06 02:08 GMT
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படாது, பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு உதவும் என்று நிதின் கட்காரி கூறினார்.
புதுடெல்லி :

டெல்லியில், வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பின் (சியாம்) வருடாந்திர மாநாடு நடைபெற்றது. அதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

ஆட்டோமொபைல் தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆட்டோமொபைல் தொழில் மீண்டு வர மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளும் வழங்கும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர்கள். இது நல்ல யோசனைதான். இதுபற்றி மத்திய நிதி மந்திரியிடம் பேசுவேன். சிறிது காலத்துக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைத்தால் கூட அது நன்மை பயக்கும். வாகன விற்பனையை அதிகரிக்க இந்த துறைக்கு இப்போது உதவுவது அவசியம். வாகன விற்பனையை அதிகரிக்க நிதி நிறுவனங்களையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வைத்திருக்க வேண்டும்.

மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. குறைத்துள்ளோம். அதுபோல், ‘ஹைபிரிட்’ வாகனங்களுக்கும் வரியை குறைக்க பாடுபடுவேன். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் பேசுவேன்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மத்திய அரசு தடை செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது. மத்திய அரசுக்கு அப்படி எந்த திட்டமும் இல்லை. அதுபோன்று செய்யப் போவதில்லை.

சர்க்கரை தொழிலுக்கு ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல், ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கும் ஏற்றுமதி ஊக்கத்தொகை வழங்குவது பற்றி மத்திய நிதி மந்திரியிடம் கேட்பேன்.

இன்னும் 3 மாதங்களில், ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள சாலை போடும் ஒப்பந்தங்களை மத்திய அரசு வழங்க உள்ளது. இதற்காக 68 சாலை திட்டங்களை தேர்வு செய்துள்ளோம். 80 சதவீத நிலங்களை கையகப்படுத்தி விட்டோம்.

இதன்மூலம் வணிக வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பதால், ஆட்டோமொபைல் துறைக்கு அது உதவிகரமாக இருக்கும்.

இவ்வாறு நிதின் கட்காரி பேசினார். 
Tags:    

Similar News