செய்திகள்
மாநிலங்களவை

என்ஜிஓ தொடர்பான வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

Published On 2020-09-23 06:16 GMT   |   Update On 2020-09-23 08:13 GMT
என்ஜிஓக்களின் செயல்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி:

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடர்பான, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா (எப்சிஆர்ஏ) மக்களவையில் கடந்த 21ம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், ‘வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவானது, தேசிய மற்றும் உள்நாட்டின் பாதுகாப்பிற்கானது. இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளில் வெளிநாட்டு நிதிகள் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பல நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை மறைக்க முயற்சித்து, அதில் வெற்றி பெற்றதையும் பார்க்க முடிந்தது.  இதற்குக் காரணம், அவர்களின் அடையாளம் முழுமையாக வெளிப்படாததால், அவர்களுக்கு எந்த பயமும் இல்லை. எனவே அவர்களின் அடையாளத்தை வெளிக்கொண்டு வருவதற்கே ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் நிதி உண்மையில் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா என்பதை சரிபார்க்க இந்த மசோதா வகை செய்வதாக பாஜக எம்.பி. அருண் சிங் தெரிவித்தார்.

சில என்ஜிஓக்கள் பினாமி அரசியலில் ஈடுபடுவதாக நியமன உறுப்பினர் ஸ்வபன் தாஸ் குப்தா பேசினார். மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த பினாமி அரசியலை கண்காணிக்க இந்த மசோதா ஒரு முக்கியமான மற்றும் மிகப்பெரிய நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

பிஜு ஜனதா தளம் எம்பி பிரசாந்தா நந்தாவும் இந்த மசோதாவை ஆதரித்து பேசினார். அதேசமயம், நேர்மையான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அதிகாரிகள் தேவையற்ற தொல்லைகள் கொடுக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால், இனி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததும் சட்ட வடிவம் பெறும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உரிய முறையில் பதிவு செய்து கொண்டு, வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி அல்லது பங்களிப்பிற்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெறுவதே எப்சிஆர்ஏ ஆகும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களுடைய எப்சிஆர்ஏ சான்றிதழை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதையடுத்து சட்டத்தை மீறாத வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் செயல்படுகிறதா என்று மத்திய அரசு ஆய்வு செய்யும். இதில் எந்தவித பிரச்சினையும் இல்லையெனில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படும்.

என்ஜிஓக்கள் மொத்த வெளிநாட்டு நிதியில் 20 சதவீதத்திற்கு மேல் நிர்வாக செலவீனங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. அடையாளச் சான்றிதழாக ஆதார் எண் கட்டாயம் அளிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பிரத்யேக எப்சிஆர்ஏ வங்கி கணக்குகளில் மட்டுமே வெளிநாட்டு நிதியைப் பெற வேண்டும். வெளிநாட்டு நிதியுதவி பெறும் செயல்களில் பொதுத்துறை ஊழியர்கள் ஈடுபடக் கூடாது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News