செய்திகள்
பாஜக

24-ந் தேதி மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம்: பாஜக அறிவிப்பு

Published On 2021-02-18 01:39 GMT   |   Update On 2021-02-18 01:39 GMT
மின் நுகர்வோருக்கு சலுகை வழங்க வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
மும்பை :

கொரோனா தொற்றால் முடங்கி இருந்தபோது மராட்டியத்தில் அதிகப்படியான மின் கட்டணம் விதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியான பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

மேலும் இதனால் பாதிக்கப்பட்ட மின் நுகர்வோருக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி மாநிலம் தழுவிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மின்சாரத்துறை மந்திரியுமான சந்திரசேகர் பவான்குலே கூறியதாவது:-

ஏற்கனவே கொரோனா பெரும்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மின் கட்டணத்தில் சலுகையோ அல்லது தள்ளுபடியோ வழங்குவதற்கு பதிலாக, சிவசேனா தலைமையிலான அரசு கட்டணத்தை செலுத்தாதவர்களின் மின் இணைப்பை துண்டித்து வருகிறது.

மின் நுகர்வோருக்கு கட்டணத்தில் சலுகை வழங்க வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி மாநிலம் முழுவதும் ‘ஜெயில் பாரோ’(சிறை நிறப்பும்) போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கியதின் மூலமாக மாநில அரசு சுமார் ரூ.9 ஆயிரத்து 500 கோடி வரை சம்பாதித்தது. கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மின் நுகர்வோருக்கு ஓரளவு மின் கட்டணத்தில் இருந்து தளர்வு அளிக்க அரசு இந்த வருவாயை பயன்படுத்த வேண்டும்.

பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசமும், குஜராத்தும் மின் நுகர்வோருக்கு நிவாரணம் அளித்துள்ளன. அதேபோல் எங்கள் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் மின் விநியோகத்தை நாங்கள் ஒருபோதும் துண்டிக்கவில்லை.

மேலும் ஆலங்கட்டி மழை மற்றும் பருவம் தவறிய மழையால் விளைபயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உதவ மாநில அரசு முன்வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News