ஆன்மிகம்
ராமேசுவரம் கோவிலுக்கு வழங்கப்பட்ட ஸ்படிக லிங்கத்தை படத்தில் காணலாம்.

ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம்

Published On 2021-02-25 08:06 GMT   |   Update On 2021-02-25 08:06 GMT
ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த 22-ந் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறந்த பின்பு 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் மட்டும் ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும். மற்ற நேரங்களில் இந்த ஸ்படிக லிங்கத்தை தரிசனம் செய்ய முடியாது.

ராமேசுவரம் கோவிலில் உள்ள ஸ்படிக லிங்கம் கடந்த 22-ந் தேதி அதிகாலை எதிர்பாராதவிதமாக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு புதிய ஸ்படிக லிங்கம் சிருங்கேரி மடத்தின் சார்பில் நேற்று வழங்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் இருந்து நேற்று காலை சுமார் 2 கிலோ எடையில் புதிய ஸ்படிக லிங்கம் கொண்டுவரப்பட்டு ராமேசுவரம் கோவில் அருகே உள்ள சிருங்கேரி மடத்தில் வைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6 மணிக்கு புதிய ஸ்படிக லிங்கத்தை சிருங்கேரி மடத்தின் நிர்வாகிகள் சித்த ராம்தாஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோவில் இணை ஆணையர் கல்யாணியிடம் ஒப்படைத்தனர்

பின்னர் மடத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஸ்படிகலிங்கம் கிழக்கு ரதவீதி வழியாக கொண்டுவரப்பட்டு கிழக்கு வாசல் வழியாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு விநாயகர், காசி விஸ்வநாதர் சன்னதியில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு யாக பூஜை நடந்த பின்பு கருவறையில் புதிய ஸ்படிக லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு கருவறையிலேயே வைக்கப்பட்டது.

இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கல்யாணி கூறியதாவது:- ராமேசுவரம் கோவிலில் ஸ்படிகலிங்கம் சேதம் அடைந்ததால் கடந்த 2 நாட்களாக ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறவில்லை. இதையடுத்து சிருங்கேரி மடத்தின் சார்பாக புதிதாக ஸ்படிகலிங்கம் வழங்கப்பட்டு உள்ளது. 25-ந்தேதி (இன்று) அதிகாலை முதல் இந்த புதிய ஸ்படிக லிங்கம் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, ராமேசுவரம் சிருங்கேரி மடத்தின் பொறுப்பாளர் மணிகெண்டி நாராயணன், கோவில் பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், காசாளர் ராமநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News