செய்திகள்
கோப்புபடம்

தா.பழூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலி - பிரேத பரிசோதனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு

Published On 2021-06-24 13:51 GMT   |   Update On 2021-06-24 13:51 GMT
தா.பழூர் அருகே குட்டையில் மூழ்கி சிறுவன் பலியானான். அவனது உடலை பிரேத பரிசோதனை செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள பொற்பொதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மனைவி பூபதி. இந்த தம்பதிக்கு பிரகாஷ் (வயது 7), செந்தில் (6) ஆகிய 2 மகன்கள். தம்பதி, நேற்று காலை காட்டுபிள்ளையார் கோவில் அருகே உள்ள அவர்களது நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது அருகில் உள்ள குட்டையில் பிரகாஷ் மற்றும் செந்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத வகையில் சிறுவன் செந்தில் குட்டை தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த பிரகாஷ், அபய குரல் எழுப்பி பெற்றோரை அழைத்தான். உடனே, வயலில் வேலை செய்து கொண்டிருந்த சிகாமணி, பூபதி மற்றும் அருகில் உள்ள வயல்களில் வேலை செய்த சிலரும் ஓடிவந்து குட்டையில் இறங்கி செந்திலை தேடினர். சிறிது நேரத்திற்கு பிறகு செந்தில் பிணமாக மீட்கப்பட்டான்.

இதுகுறித்து தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். தற்போது கொரோனா காலமாக இருப்பதால் உடலை எடுத்துச் சென்றால் மீண்டும் ஒப்படைக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறுவனின் உடலை போலீசாரிடம் ஒப்படைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களிடம் போலீசார் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் இரவு 9 மணி வரை சிறுவனின் உடலை ஒப்படைக்க கிராம மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

இதுகுறித்து ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அவர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரேத பரிசோதனை முடிந்து நிச்சயமாக சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று அவர் உறுதியளித்ததன்பேரில் இரவு 10 மணி அளவில் சிறுவனின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், சிறுவனின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News