செய்திகள்
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து போது எடுத்த படம்

கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை

Published On 2019-11-14 18:22 GMT   |   Update On 2019-11-14 18:22 GMT
கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்:

கரூர் நகராட்சிக்குட்பட்ட நேதாஜி நகர் சின்னக்குளத்துப்பாளையம், வெங்கமேடு கொங்குநகர், அண்ணாசாலை, ராயனூர் கொங்குமுத்து நகர், ஈஸ்வரன்கோவில் அருகில் உள்ள பகுதி, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் தலா ரூ.3¼ லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பாக மூடப்பட்ட ஆழ்துளைகிணறுடன் மின்மோட்டார் பொருத்தப்பட்ட சிண்டக்ஸ் குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகத்தினை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர், பசுபதிபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சீரணி அரங்கத்தையும், காந்திகிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையினையும் அமைச்சர் திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வெங்கமேடு பகுதியில் ரூ.7லட்சம் மதிப்பிலும், தெரசா மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ.15 லட்சம் மதிப்பிலும், அமைக்கப்படவுள்ள பயணிகள் நிழற்குடைக்கான பூமிபூஜையினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், காந்திகிராமம் மேல்நிலைநீர்த்தேக்கத்தொட்டி அருகிலும், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோவில் நுழைவுவாயில் அருகில் உள்ள பொதுசுகாதார பிரிவு அலுவலகம் பகுதியிலும், கரூர் உழவர்சந்தை அருகில் உள்ள அம்மா உணவக வளாகத்திலும் சமூகநல திட்டத்தின் கீழ் தலா ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் நிலையங்களை அமைச்சர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்தமான குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் பேசியபோது கூறியதாவது:-

கரூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளிலும் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இன்று (நேற்று) 21, 45, 37 ஆகிய வார்டுகளில் இந்த சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் வழங்கும் நிலையம் திறந்துவைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அபெக்ஸ் எனப்படும் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்துடன், நகராட்சி நிர்வாகம் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த குடிநீர் வழங்கும் நிலையத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை குடிநீர் வழங்கும் எந்திரத்தில் செலுத்தினால் ஒரு லிட்டர் குடிநீர் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாது, 7 ரூபாய்க்கு 20 லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டமும் உள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்த பொதுமக்கள் அதற்கான ஸ்மார்ட் கார்டை வைத்திருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் கார்டை தானியங்கி எந்திரத்தில் காட்டினால் 20 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இந்த தானியங்கி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில், பொதுமக்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மிக விரைவில் குடிநீர் பெறுவதற்கான ஸ்மார்ட் கார்டுகளை வழங்க உள்ளது.

இந்த கார்டை பெற தலா ரூ.150 செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தும் தொகையானது, ஸ்மார்ட் கார்டு மூலம் தானியங்கி நிலையத்தில் தண்ணீர் பெறும்போது அதற்கேற்றவாறு எடுத்துக்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட கலெக்டர் அன்பழகன், கீதா எம்.எல்.ஏ., திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், இயக்குனர் ஆலம்.கே.தங்கராஜ், நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் நெடுஞ்செழியன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் மார்்க்கண்டேயன், நகராட்சி ஆணையர்(பொ) ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் செல்வராஜ், வி.சி.கே.ஜெயராஜ், பொரணி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News