செய்திகள்
டெங்கு காய்ச்சல்

வடசென்னை பகுதியில் டெங்கு பாதிப்பு அதிகம்

Published On 2019-10-04 06:00 GMT   |   Update On 2019-10-04 05:37 GMT
வடசென்னை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில் பலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் ‘டெங்கு’ காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

டெங்கு பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாலும் பல்வேறு இடங்களில் பொது மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு டெங்கு அறிகுறி இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து, பாதிப்பு உள்ளவர்களுக்கு தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக முக்கிய ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரிலும் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வடசென்னை பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதியில் பலருக்கு டெங்கு பாதிப்பு அறிகுறி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 350 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. முன்பு தென்சென்னையில்தான் டெங்கு பாதிப்பு இருக்கும். ஆனால் இப்போது வடசென்னையில் இருந்துதான் அதிகமானோர் டெங்கு பாதிப்புடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவோரில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் வட சென்னை பகுதியை சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களை கணக்கெடுத்து வருகிறோம். அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. சேகர் பாபு கூறியதாவது:-

வடசென்னை பகுதிகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர், மழை நீர் தேங்குகிறது. இதனால் டெங்கு கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின்றன.

இதன்காரணமாக வட சென்னை பகுதியில் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். வடசென்னை பகுதியில் 600 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அரசு டெங்கு பாதிப்பை மறைக்கிறது. மர்ம காய்ச்சல் என்று கூறுகிறார்கள். மக்கள் நலனை பேணுவதில் அரசு எந்திரம் தோல்வி அடைந்துவிட்டது.

தண்டையார்பேட்டையில் கடந்த மாதம் 25 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் வடசென்னையில் இருந்து வருபவர்கள்தான் அதிகம்.

கடந்த மாதம்வரை தென்சென்னை அடையார் பகுதியில் இருந்து டெங்குவால் பாதிக்கப்பட்டதாக யாரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படவில்லை. வடசென்னையில் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் சராசரியாக 200 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று சிகிச்சைக்கு வந்தவர்களில் 5 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. இதில் ஒரு ஆண், 4 பேர் குழந்தைகள்.

கடந்த சில தினங்களாக காய்ச்சலுக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 15 பேர் ஆண்கள், 25 பேர் குழந்தைகள். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News