செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா பரவல் பற்றி ஐ.சி.எம்.ஆர். ஆய்வு

Published On 2021-06-12 21:56 GMT   |   Update On 2021-06-12 21:56 GMT
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), கொரோனா பரவலை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் ‘செரோ’ ஆய்வை தொடங்க உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பரவலை மதிப்பிட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடுதழுவிய ஆய்வை நடத்த உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியில் உயரிய அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.), கொரோனா பரவலை மதிப்பிடுவதற்காக நாடு முழுவதும் ‘செரோ’ ஆய்வை தொடங்க உள்ளது. அதுபோல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து புவியியல்சார்ந்த தகவல்களையும் பெற முடியும்.

நாட்டில் கொரோனா நிலவரம் சீராகி வருகிறது. கடந்த மே 7-ந் தேதி தினசரி கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், தினசரி கொரோனா பாதிப்பு 78 சதவீதம் குறைந்துள்ளது.அதுபோல், வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம், கடந்த ஏப்ரல் 30-ந் தேதிக்கும், மே 6-ந் தேதிக்கும் இடையிலான வாரத்தில் உச்சம் தொட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், வாராந்திர பாதிப்பு விகிதத்தில் 74 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்து வருவதற்காக பொதுமக்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது. கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைத்தால்தான், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான அழுத்தம் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News