செய்திகள்
எடியூரப்பா

சாலையோர வியாபாரிகள் 2 லட்சம் பேருக்கு நிவாரண திட்டத்தை தொடங்கி வைத்த எடியூரப்பா

Published On 2021-06-09 03:56 GMT   |   Update On 2021-06-09 03:56 GMT
கர்நாடகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் சுமார் 2 லட்சம் பேருக்கு நிவாரணமாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார்.

அதன்படி ஒவ்வொரு பிரிவு தொழிலாளர்களுக்கும், அவர்களின் வங்கி கணக்கில் உதவித்தொகையை வரவு வைக்கும் நிகழ்ச்சியை எடியூரப்பா தொடங்கி வைத்து வருகிறார். இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-மந்திரி எடியூரப்பா சாலையோர வியாபாரிகள் சுமார் 2 லட்சம் பேர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

“கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு கீழ் நிலையில் உள்ள தொழிலாளர்களுக்கு அரசு மனிதநேயத்தின் அடிப்படையில் உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதை நான் தொடங்கி வைத்துள்ளேன். கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 16 ஆயிரத்து 439 சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.

இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தங்களின் பொருட்களை விற்பனை செய்ய இடமும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பலன்களும் உரிய முறையில் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் தற்சார்பு திட்டத்தின் கீழ் இந்த சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் தலா ரூ.10 ஆயிரம் சிறு கடன் வழங்கப்படுகிறது. இதுவரை அந்த திட்டத்தின் கீழ் அவர்களுக்கு ரூ.107 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்த சாலையோர வியாபாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இன்று (அதாவது நேற்று), வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள 1 லட்சத்து 91 ஆயிரத்து 684 பயனாளர்களுக்கு உதவித்தொகை தலா ரூ.2,000 என்று மொத்தம் ரூ.38.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், அதை செய்து முடித்தால் அவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெற ஏற்கனவே பதிவு செய்து கொண்ட சாலையோர வியாபாரிகள் தனியாக விண்ணப்பிக்க தேவை இல்லை. இந்த உதவித்தொகைய அவர்களின் கடனுக்கு பிடித்தம் செய்யக்கூடாது என்று வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை நம்மை தீவிரமாக தாக்கியுள்ளது. இத்தகைய நேரத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கட்டிட தொழிலாளர்கள், ஆஷா ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு ரூ.1,700 கோடி உதவித்தொகையை அறிவித்தேன். இதில் பெரும் பகுதியினருக்கு உதவித்தெகை வழங்கப்பட்டுள்ளது.

சாலையோர வியாபாரிகள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் நிலை அதிகமாக உள்ளது. அதனால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு மாநகராட்சியில் இந்த பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. சாலையோர வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தின்போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விஷயங்களை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.”

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News