செய்திகள்
மம்தா பானர்ஜி

மோடியை ஆட்சியில் இருந்து நீக்குவதே அடுத்த இலக்கு - மம்தா பானர்ஜி

Published On 2021-06-10 10:38 GMT   |   Update On 2021-06-10 10:38 GMT
தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி.யை சுமத்துவது என்பது மக்களின் வாழ்க்கை மற்றும் இறப்புடன் விளையாடுவதை போன்றது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றினார். அவர் பா.ஜனதாவை வீழ்த்தி மேற்கு வங்காளத்தில் தன்னை அசைக்க முடியாத தலைவர் என்பதை நிரூபித்தார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் விவசாய சங்க தலைவர்களான ராகேஷ் திகாயக், யுத்வீர்சிங் ஆகியோர் கொல்கத்தாவில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்தார்கள்.

அப்போது புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயி சங்கத்தினர் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக அவர்களிடம் மம்தா உறுதி அளித்தார். பின்னர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. இந்த சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்காள சட்டசபையிலும் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

விவசாயிகள் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா ஆட்சியில் இல்லாத மாநில முதல்-மந்திரிகளுடன் பேசுமாறும், வேளாண் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யுமாறும் பாரதிய கிஷான் சங்கத்தினர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகள் நடத்தும் போராட்டமானது பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசத்துக்கு மட்டுமல்ல அது ஒட்டு மொத்த தேசத்துக்குமானது. எனவே எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆதரவை விவசாயிகளுக்காக திரட்டுவோம்.

கொள்கை ரீதியான விவகாரங்கள் தொடர்பாக மாநில அரசுகள் ஒன்று கூடி விவாதிக்க வேண்டியது அவசியமாகும். அநீதிக்கு எதிராக நாம் ஒன்றாக நிற்க வேண்டும். 

புதிய வேளாண் சட்ட விவகாரத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மத்திய அரசுக்கு ஏன் இவ்வளவு கடினமாக இருக்கிறது. கொரோனா தொற்று விவகாரம் முதல் விவசாயிகள் பிரச்சினை வரை மத்திய அரசு நாட்டை இக்கட்டான பிரச்சினைக்கு கொண்டு சென்று உள்ளது.மோடியை ஆட்சியில் இருந்து நீக்குவதே எனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையாக இருக்கும். மாநிலங்களை புறக்கணிப்பது கூட்டாட்சி அமைப்புக்கு நல்லதல்ல. 


சுகாதாரம் முதல் வேளாண்மை வரை அனைத்து துறைகளும் பா.ஜனதா ஆட்சியில் மோசமான நிலையை சந்திக்கிறது.மாநிலங்களுக்கு எதிராக எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு பிரித்தாள வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு (பிரதமர் மோடி) மட்டுமே தெரியும்.

கொரோனா தடுப்பூசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விலக்கு அளிப்பது தொடர்பாக அவர் ஏன் பேச மறுக்கிறார். தடுப்பூசிகளுக்கு ஜி.எஸ்.டி.யை சுமத்துவது என்பது மக்களின் வாழ்க்கை மற்றும் இறப்புடன் விளையாடுவதை போன்றது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Tags:    

Similar News