செய்திகள்
தனிமைப்படுத்துதல்

கோவை வரும் விமான பயணிகளுக்கு 7 நாட்கள் கட்டாய தனிமை

Published On 2021-11-30 04:55 GMT   |   Update On 2021-11-30 04:55 GMT
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை:

ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கோவை விமான நிலையத்தில் தென் ஆப்பிரிக்கா, சீனா, ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து சென்னை, பெங்களூரு வந்து அங்கிருந்து கோவை வரும் பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைகள் செய்வதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கோவை சுகாதாரத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகள் எதுவும் இல்லை. இருப்பினும் தொற்று பரவியுள்ள நாடுகளில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற விமான நிலையங்களுக்கு வந்து, அங்கிருந்து விமான நிலையம் வருபவர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக சிறப்பு பரிசோதனை குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிக ரிஸ்க் உள்ள நாடுகள் என கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், இங்கிலாந்து, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, ஜிம்பாப்வே, மொரீசியஸ், சிங்கப்பூர், இஸ்ரேல் ஆகிய 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் அவர்கள் 7 நாட்கள் கட்டாயம் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். 8-வது நாளில் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கு என்று கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 99 வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்களுக்கு பரிசோதனை தேவையில்லை. அவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News