செய்திகள்
கைது

சங்கராபுரத்தில் நகைக்கடையில் திருடிய 2 பெண்கள் கைது

Published On 2020-10-17 06:11 GMT   |   Update On 2020-10-17 06:11 GMT
சங்கராபுரத்தில் உள்ள நகைக்கடையில் நகையை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்தது.
சங்கராபுரம்:

சங்கராபுரம், சன்னதி தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பாலாஜி (வயது 24). இவர் அந்த பகுதியில் நகை கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 29-ந்தேதி இவரது கடைக்கு வந்த 2 பெண்கள் நகை வாங்குவது போன்று நடித்து 4 பவுன் நகையை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம் மேற்பார்வையில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராயப்பன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று சங்கராபுரம் தாலுகா அலுவலகம் பஸ் நிறுத்தம் அருகே 2 பெண்கள் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்தனர். இதற்கிடையே பாலாஜியின் நகைக்கடையில் திருட்டு வழக்கில் அங்கு பதிவான கண்காணிப்பு காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வந்த பெண்களை போன்றே அவர்கள் இருவரும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்த போது அவர்கள் தான் என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், மயிலாடுதுறை கூரைநாடு பகுதியை சேர்ந்த கனகசபை மனைவி கவிதா (வயது 47), மயிலாடுதுறை தாலுகா ஸ்ரீகண்டபுரத்தை சேர்ந்த பாஸ்கர் மனைவி சுதா (38) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் நகையை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பெண்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று தேனி, மதுரை, சென்னை, கும்பகோணம், சீர்காழி பகுதியில் உள்ள நகைக்கடைகளில் இவர்கள் 2 பேரும் கைவரிசை காட்டி வந்தது விசாரணையின் போது தெரியவந்தது.
Tags:    

Similar News